”வேதனையா இருக்கு” – வாடகைத் தாய் முறையே தேர்ந்தெடுத்தது ஏன்? – பிரியங்கா சோப்ரா உருக்கம்!

வாடகைத் தாய் முறையை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்தப் பிரபல பாடகரான நிக் ஜோனஸை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தன்னைவிட பத்துவயது இளையவரை திருமணத் செய்துகொண்டதாக அப்போது கிண்டலுக்கு உள்ளானார் பிரியங்கா சோப்ரா. எனினும் இதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்களது திருமண வாழ்க்கையை இவர்கள் சந்தோஷமாக எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த நிலையில், 3 ஆண்டுகள் கழித்த இந்தத் தம்பதி வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டதாக (Surrogacy), கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்களது சமூகவலைத்தளப் பக்கங்களில் அறிவித்தனர்.

இதற்கு பிரபலங்கள், அவர்களது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், வழக்கம்போல் மீண்டும் ட்ரோலுக்கு உள்ளானதுடன் கடுமையான விமர்சனத்துக்கும் ஆளானார்கள் பிரியங்கா – நிக் ஜோன்ஸ் தம்பதி. சுமார் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், வாடகைத் தாய் முறையை தேர்ந்தெடுத்தது ஏன் என நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது முதல் முறையாக தெரிவித்துள்ளார்.

அதில், “அந்த நேரத்தில் மக்கள் என்னைப் பற்றி கடும் விமர்சனங்கள் வைத்து பேசியப்போது, அதிலிருந்து என்னை விலக்கிக் கொண்டு வாழ்வதை கடினமாக வளர்த்துக் கொண்டேன். ஆனால் அவர்கள் என் மகளைப் பற்றி பேசியது மிகவும் வேதனையாக இருந்தது. நான், ‘அவளை அதிலிருந்து விலக்கி விடு’ என்பது போல் இருந்தேன். உண்மையில் எனக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்தன. அதனால் வாடகைத் தாய் முறை எங்களுக்கு அவசியமானதாக இருந்தது. நான் இதைச் செய்யக்கூடிய நிலையில் இருந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

image

எனது மகள் மால்டி மேரி, பிரசவத் தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பிறந்து விட்டார். இது பெரும்பாலும் குழந்தைக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவள் கருவிலிருந்து வெளியே வரும் போது நானும், ஜோனஸும் அறுவை சிகிச்சை அறையில் இருந்தோம். மால்டி மேரி என் கைகளை விட மிகவும் சிறியதாக இருந்தாள். அந்த சிறிய உடலுக்கு இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்ற தேவை இருக்கிறது என்று அவர்கள் எப்படி கண்டுப்பிடித்தார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. (செவிலியருக்கு நன்றி).

குழந்தை ஐசியூ இன்குபேட்டரில் இருந்த 3 மாதங்களும், மருத்துவமனைக்கும், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த எங்களது வீட்டுக்கும், நானும், ஜோனஸும் மாறி மாறி அலைந்துக் கொண்டு இருந்தோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளுடன் பிரியங்கா சோப்ரா பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.