மொகாதிசு,-சோமாலியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க, அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில், ‘அல் – குவைதா’ பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘அல்- – ஷபாப்’ அமைப்பு, மத்திய மற்றும் தெற்கு சோமாலியா பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது, பிற பகுதிகளையும் கைப்பற்ற பொதுமக்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த அமைப்புக்கு எதிராக, சோமாலியா அதிபர் ஹாசன் ஷேக் முகமது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அல் – ஷபாப் அமைப்பின் வசம் உள்ள பகுதிகளை, சோமாலியா அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில் சோமாலியாவின் கல்கத் பகுதியில் உள்ள அல் – ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக சோமாலியா அரசு தெரிவித்துள்ளது.
எனினும், இதை அல்- – ஷபாப் அமைப்பினர் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலில், சோமாலியா ராணுவத்தினர் 150க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அது தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement