5 முனைப் போட்டியா? பிரியும் காங்கிரஸ் வாக்குகள்… செம டஃப் ஆகும் ஈரோடு கிழக்கு!

தமிழ்நாடு அரசியல் களம் அடுத்த ஒன்றரை மாதத்திற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை மையப்படுத்தியே நகரும் என்பதில் சந்தேகமில்லை. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட
காங்கிரஸ்
வெற்றி பெற்றது.

2021 தேர்தல் முடிவுகள்

இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தது. 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதுதவிர நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அப்போதே ஐந்து முனை போட்டியாக களம் இருந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை காங்கிரஸ் (67,300), தமிழ் மாநில காங்கிரஸ் (58,396),
நாம் தமிழர்
(11,629), மக்கள் நீதி மய்யம் (10,005) ஆகிய கட்சிகள் பெற்றன.

சிதறும் வாக்குகள்

அமமுகவை பொறுத்தவரை நோட்டாவை (1,546) விட குறைவாக 1,204 வாக்குகளை மட்டும் பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதான போட்டி என்பது காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் இடையில் தான். இதனால் திமுக, அதிமுக வாக்குகள் சிதறி போக வாய்ப்பிருந்தது. இம்முறை களம் வேறாக இருக்கிறது. தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களின் படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

கொங்கு மண்டல செல்வாக்கு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் இருந்து சீட்டை அதிமுக திரும்ப பெற்றுக் கொண்டது. அப்படியெனில் பிரதான போட்டி காங்கிரஸ், அதிமுக இடையில் என்பது தெரிய வருகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு பெற்று விளங்குவது பலருக்கும் தெரிந்த விஷயம். அப்படி ஒரு சூழலில் அக்கட்சி நேரடியாக போட்டியிடுவது பலமாக பார்க்கப்படுகிறது. தோல்வியை தழுவினால் கூட சிறிய அளவிலான வாக்கு எண்ணிக்கையில் மட்டுமே நிகழ வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

உட்கட்சி பூசல்

ஆனால் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யாராவது ஒருவர் நிறுத்தப்படக்கூடும். இதனால் அதிமுக வாக்குகளே பிரியும் என்கின்றனர் ஒருசாரார். இவர்களை அடுத்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்த கட்சி தொடங்கியதில் நடத்தப்படும் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற, இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்துள்ளது.

டிடிவி தினகரன் முடிவு

அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு தொகுதியும் விதிவிலக்கல்ல. இதையடுத்து அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. வரும் 27ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி நல்ல செய்தி வெளியிடப்படும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். அப்படியெனில் அமமுக போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. கமல் ஹாசனை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் திமுக உடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

கமல் ஹாசன் திட்டம்

இது 2024 மக்களவை தேர்தல் வியூகமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் விலகி கொண்டாலும் ஈரோடு கிழக்கு இம்முறையும் 5 முனை போட்டியாகவே காணப்படும். இது காங்கிரஸ் கட்சிக்கு விழும் வாக்குகளை பிரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.