71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல் அரசுப்பணி நியமன செயல்முறை ஒன்றிய அரசு சீர்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு ஒன்றிய அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி, ‘‘பாஜ ஆட்சியில் அரசுப்பணி ஆட்சேர்ப்பு செயல்முறை சீர் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். வரும் 2024ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்து, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தற்போது 3வது கட்டமாக ரோஜ்கர் மேளாவில் மேலும் 71,426 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காணொலி வாயிலாக நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி, பணி நியமன ஆணை பெற்றவர்களிடம் பேசியதாவது:
ரோஜ்கர் மேளா பாஜ ஆட்சியின் அடையாளமாக மாறி உள்ளது. இந்தியா இன்று மாற்றத்தை கண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதன் மூலம் சுயதொழில் துறையில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

ஒரு புதிய சாலை, ரயில் வழித்தடம் அமைக்கும் போது, அதன் அருகாமையில் சுயதொழிலுக்கான பாதையும் அமைகிறது. புதிய சந்தைகள் உருவாகின்றன. புதிய கடைகள் உருவாகின்றன. சுற்றுலா வளர்ச்சி அடைகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைகளுக்கு எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. இத்தகைய விரிவாக்கம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. பாஜ ஆட்சியில் அரசுப்பணிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை நெறிப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட காலவரை நிர்ணயிக்கப்பட்டு பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுப்பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வெளிப்படைத்தன்மையான ஆட்சேர்ப்பு செயல்முறை, மக்களின் திறமைக்கும், தகுதிக்கும் வெகுமதியாக அரசுப்பணியை வழங்கி வருகிறது. இன்று அரசுப்பணியில் யாரும் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அரசுப்பணிக்கான நியமன ஆணை பெற்றுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* மக்களுக்கே முன்னுரிமை
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘தொழில் செய்யும் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை என்பது தாரக மந்திரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதே போல, அரசு நிர்வாகத்தில் குடிமக்களுக்கே முன்னுரிமை என்பதை அரசு பணியாளர்கள் தாரக மந்திரமாக ஏற்க வேண்டும். அதனால்தான் அரசு துறையில் வழங்கப்படும் பணியை அரசு சேவை என்கிறோம், அது வேலை அல்ல’’ என்றார். ரோஜ்கர் மேளாவில் இதுவரை 2.17 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘இதெல்லாம் கொசுறு’ காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘அரசு துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்படியிருக்கையில் இன்று வழங்கப்பட்ட 71,000 பணி நியமனங்கள் மிகவும் குறைவு. ஆட்சிக்கு வரும் முன்பு, ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றீர்களே? கடந்த 8 ஆண்டில் 16 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?’ என கேள்வி கேட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.