அண்ணாமலையை சந்தித்த ஓபிஎஸ்: பாஜக முடிவு தான் என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவுக்குள் மீண்டும் குழப்ப ரேகைகள் சூழ்ந்துள்ளன.

பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவே போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்த நிலையில் தமாகா தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கியது.

கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளிடம் ஆதரவு பெறும் வேலையை அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேசிவருவதாக ஓபிஎஸ் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்

டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், அண்ணாமலை ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில் ஓபிஎஸ்ஸும் ஆதரவு கோருகிறார்.

அண்ணாமலையை சந்தித்தப் பின்னர் வெளியே வந்த ஜெயக்குமார், பாஜகவின் நிலைப்பாட்டை அக்கட்சித் தலைவரே அறிவிப்பார் என்று கூறிச் சென்றார்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “பாஜக தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.