ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸா… காவியா… வாரிசை வேட்பாளராக்கும் திமுக கூட்டணி?

Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த ஜன. 4ஆம் தேதி  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தர். இவர் முன்னாள் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப். 27ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன. காங்கிரஸ் சார்பில் போட்டியில், திருமகன் ஈவேரா வெற்றி பெற்று தொகுதியில் நற்பெயரை சம்பாதித்து வைத்திருந்தது நினைவுக்கூரத்தக்கது. 

எனவே, தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் ஆளும் திமுக தரப்பு, காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் அந்த தொகுதியை வழங்கியுள்ளது. இதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வென்றதால், அவரது குடும்பத்தில் இருந்தே வேறு யாரேனும் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை களமிறக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், சென்னையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று அளித்த பேட்டியில், தான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், கட்சியிடம் தனது இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது ஒருபுறம் இருக்கு, எதிர்க்கட்சித் தரப்பில் இன்னும் குழப்பமே நீடிக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதும், அதிமுக கூட்டணி தமாகா கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இபிஎஸ் தரப்பு இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த விருப்பம் தெரிவித்தது. எனவே, அதிமுகவுக்கு தனது ஆதரவு என்றும், இந்த இடைத்தேர்தலில் போட்டியில்லை எனவும் தாமாகவின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்தார். 

ஆனால், பாஜகவும் ஒருபுறம் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தங்கள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிடுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பாஜக, போட்டியிட திட்டமிட்டால் அதற்கு ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பு ஆதரவு அளிக்கும் என தெரிகிறது. இதனை ஓபிஎஸ் வெளிப்படையாக கூறிவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பு இதுகுறித்து எதுவும் தகவல் அளிக்கவில்லை. 

மேலும், ஓபிஎஸ் அதிமுக கூட்டணி கட்சியினரை இன்று சந்திக்க உள்ளனர். அதாவது, முதலில் ஜி.கே. வாசனை சந்தித்த ஓபிஎஸ், அடுத்து மாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை ஓபிஎஸ் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்கிடையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் என்பது மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால், இம்முறை அதிமுக சார்பில் எந்த தரப்பு வேட்பாளர்களை அறிவிப்பார்கள் அல்லது பொது ஒற்றுமையின் அடிப்படையில் பாஜக போட்டியிட அதிமுகவின் இருதரப்பும் அனுமதியளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.