ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக, காங்கிரஸ் கூட்டணி முதலில் வாக்கு சேகரிப்பை தொடங்கியது: அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு பிரசாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதன் முதலாக நேற்று வாக்குச் சேகரிப்பை தொடங்கியது திமுக, காங்கிரஸ் கூட்டணி. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த சட்டமன்ற  தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது இடைத்தேர்தலிலும்  மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே, திமுக ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பெரியார் நகர் பகுதியில், திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதன் முதலாக வாக்குச் சேகரிப்பை தொடங்கினார். அப்போது அவருக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, பெரியார் நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகளிடமும் அப்பகுதியில் வீடுகள் தோறும் அமைச்சர் சு.முத்துசாமி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் வாக்கு சேகரிப்பில் பங்கேற்றார். பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறுகையில், வரும் நாட்களில், திமுக அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் கூறப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்றார். அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், எதிர்க்கட்சிகள் எப்போதும் குறை சொல்லி கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், இந்த ஆட்சியில் மக்கள் என்ன பார்த்துள்ளார்கள், என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பது மார்ச் 2ம் தேதி தெரியப்போகிறது. இந்த ஆட்சிக்கு மேலும் ஊக்கத்தை வழங்கும் வகையில் இந்தத் தேர்தல் முடிவு அமையும். அதற்கு ஏற்ற வகையில் இந்த இடைத்தேர்தலில் பணியாற்றுவோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.