தை அமாவாசை திருமூர்த்தி மலையில் பக்தர்கள் குவிந்தனர்: 250 மாட்டு வண்டிகளில் விவசாயிகள் சிறப்பு வழிபாடு

உடுமலை,: தை அமாவாசை தினமான இன்று திருமூர்த்தி மலையில் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு மலை மீது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள் ஒரே இடத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

கோவிலில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சலிங்க அருவி உள்ளது.அருவியில் இருந்து விழும் தண்ணீர் பாலாறாக உருமாறி அமண லிங்கேஸ்வரர் ஆலயத்தை சுற்றி ஓடி திருமூர்த்தி அணையில் சென்று கலக்கிறது.ஆண்டு முழுவதும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டுவதால் இங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிக அளவில் இருக்கும்.

பிரதோஷம் ,கிருத்திகை ,தை அமாவாசை, ஆடி அமாவாசை ,சித்ரா பௌர்ணமி, சித்திரை 1 உள்ளிட்ட விசேஷ தினங்களில் திருமூர்த்தி மலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடைபெறும்.
அறுவடை முடிந்து தை பொங்கல் தினத்தில் பொங்கல் இட்டு கதிரவனுக்கு படைப்பதோடு அடுத்த நாள் கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு வழிபாடு நடத்தும் விவசாயிகள் தை அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளில் காளைகளைப் போட்டி அவற்றை திருமூர்த்தி மலைக்கு ஓட்டி வருவது வழக்கம்.

நேற்றைய தினம் இரவே ஜல்லிப்பட்டி, சாமுராயப்பட்டி ,தளி ,பெதப்பம்பட்டி, வாழவாடி, மடத்துக்குளம், உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டிகளில் திருமூர்த்தி மலையை வந்தடைந்தனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை காளை மாடுகளை திருமூர்த்தி அணையில் குளிப்பாட்டி மாலையிட்டு சந்தனம் குங்குமம் இட்டு உற்சாகப்படுத்தியதோடு விவசாயிகள் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய கடவுள்களை தரிசனம் செய்தனர். பின்னர் வீடுகளில் இருந்து கட்டி எடுத்து வந்த உணவுகளை சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.

தை அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவதற்கு உகந்த தினம் என்பதால் திருமூர்த்தி மலை மீது பாலாற்றின் கரையில் ஏராளமான புரோகிதர்கள் திதி மற்றும் முன்னோர்களுக்கான தர்ப்பணம் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த  பொதுமக்கள் பலர் இறந்த போன தங்களின் முன்னோர்களின் பெயர், நட்சத்திரம், குலம் ,கோத்திரம் உள்ளிட்டவற்றை சொல்லி திதி கொடுத்தனர். திருமூர்த்தி அணையின் கரைகளில் ஓசைகள் வந்திருந்த மாட்டு வண்டிகள் அழகுற நிறுத்தப்பட்டிருந்தது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.