நம்ம ஸ்கூல் பவுண்டேசன்: திமுக எம்.எல்.ஏ.க்கள் ரூ.1.29 கோடி நிதி!

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் வழங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தொடங்கி வைத்து, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த விழாவிலேயே ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினையும் தனது பங்களிப்பாக வழங்கினார்.

இந்தக் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இந்த தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலினிடம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் வழங்கினர்.

அதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர், அப்துல் சமது ஆகியோரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன், சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளை வழங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.