''நீதிபதியானதற்கு எம்ஜிஆர்-தான் காரணம்'' – முன்னாள் நீதிபதி கற்பகவிநாயகம் நெகிழ்ச்சி

சென்னை: நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த தான், நீதிபதியானதற்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர்-தான் காரணம் என்று ஜார்கண்ட் முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும், மூத்த நீதிபதியாகவும் பணியாற்றிய எம்.கற்கபவிநாயகம், ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், 1972-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து சட்ட தொழிலை தொடங்கினார். சட்டப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், “நீதிபதி எம்.கற்பகவிநாயகம், விநாயகர் சதுர்த்தி அன்று பிறந்ததால்தான் அந்த பெயரை அவரது பெற்றோர் சூட்டியுள்ளனர். விநாயகர் புத்திக்கு அதிபதி. அதனால்தான் நீதிபதி கற்பகவிநாயகம், வழக்கறிஞராகவும், நடிகராகவும், நீதிபதியாகவும் திறம்பட செயல்பட்டுள்ளார். இப்போதும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரது முகத்தில் எப்போதும் தெரியும்” என்று பேசினார்.

இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய நீதிபதி எம்.கற்பகவிநாயகம், “என்னுடைய முன்னேற்றத்துக்கு முக்கியமானவர்கள் 3 பேர். ஒருவர் எம்ஜிஆர், 2-வது என்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்த முன்னாள் நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம், 3-வது என் மனைவி. எம்ஜிஆருக்காக நான் சிறைக்கு சென்று இருக்கிறேன். எம்எல்ஏவாக வேண்டும்; சினிமா நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நாடக நடிகராக இருந்த எனக்கு சினிமா வாய்ப்பு வந்தபோது, கதை கேட்ட பின்னர் நடிப்பதற்கு ஒப்புக்கொள் என்று எம்ஜிஆர் கூறினார். ஆனால், ஏவிஎம் நிறுவனம் உட்பட பல வாய்ப்புகள் வந்தும், என்னை எம்ஜிஆர் நடிக்க அனுமதிக்கவில்லை. அவர்தான் என்னை அரசு குற்றவியல் வழக்கறிஞராக்கினார். பின்னர் அவரது விருப்பப்படி நானும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனேன். ஒருவேளை நான் நடிகராகி இருந்தால் என் வாழ்க்கையை தொலைத்து இருப்பேன். எம்எல்ஏவாகி இருந்தால், அமைச்சராகி பின்னர் ஜெயிலுக்குப் போய் இருப்பேன். நான் நீதிபதியானேன். திருப்தியான வாழ்க்கையை ஒழுக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இதற்கு காரணம் எம்ஜிஆர்தான்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், ஜி.ஜெயச்சந்திரன், பி.புகழேந்தி, ஆர்.என்.மஞ்சுளா, டி.பரத சக்கரவர்த்தி. சுந்தர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.