மேம்பாலம், சாலை வசதி இல்லாததால் வெள்ளம், வயல்வெளி வழியாக சடலத்தை சுமந்துசெல்லும் மக்கள்: ஆரணி, கண்ணமங்கலம் அருகே அவதி

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு ஊராட்சிக்குபட்ட கமண்டலாபுரம், சாமந்திபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் யாராவது இறந்தால் அதே பகுதியில் உள்ள கமண்டல நதியில் கடந்துசென்று சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதியும், கமண்டல நதியின் குறுக்கே மேம்பாலமும் இல்லை. இதனால் ஆற்றில் வெள்ளம் பாயும் போது சடலத்துடன் வெள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றை கடத்து சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்படுகிறது.  இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கமண்டலாபுரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மணி என்பவர் நேற்று உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது சடலத்தை, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். ஆனால் கமண்டல நதியில் வெள்ளம் ஓடி கொண்டிருப்பதால் மார்பளவு தண்ணீரில் சடலத்துடன் வெள்ளத்தில் இறங்கி சடலத்தை கடந்து சென்று அடக்கம் செய்தனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக கமண்டல நதியின் குறுக்கே சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்ைக விடுத்துள்ளனர்.  

ஆரணி:  ஆரணி ஒன்றியம், மட்டதாரி ஊராட்சிக்குட்பட்ட மைனந்தல் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறப்பவர்களின் சடலத்தை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி அங்குள்ள விவசாய நிலங்கள், வயல்வெளிகள் வழியாக கடந்த 16 ஆண்டுகளாக சடலத்தை எடுத்து செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், மைனந்தல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் இறந்தார். அவரது சடலத்தை அங்குள்ள விவசாய நிலம் வழியாக சேறும், சகதியுமான பாதையிலும், நெல் வயல், நெல் நடவு செய்துள்ள நிலத்திலும் இறங்கி சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றனர். அப்போது, சடலத்தை தூக்கி சென்றவர்கள் சேற்றில் சிக்கி கடும் சிரமப்பட்டனர். இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வு காணவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.