‘கார் பேனட்’ மீது விழுந்தவரை 2 கி.மீ., இழுத்து சென்ற பெண்
பெங்களூரு: பெங்களூரில் கார் பேனட் மீது விழுந்த நபரை, 2 கி.மீ., காரில் இழுத்து சென்ற பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
பெங்களூரின், உல்லாள் பிரதான சாலை ஜங்ஷன் அருகில், பிரியங்கா என்பவர் தன் கணவருடன், நேற்று காலை, ‘டாடா நெக்சான்’ காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது காரும், எதிரே வந்த, ‘மாருதி ஸ்விப்ட்’ காரும் மோதின.
இதனால், பிரியங்காவுக்கும், ஸ்விப்ட் காரில் வந்த தர்ஷன் என்பவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.
காரில் இருந்து இறங்கிய பிரியங்கா, தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது தர்ஷனும், அவரது நண்பர்களும் காரில் இருந்து, ஆவேசமாக இறங்கினர்.
இதனால், பதற்றம்அடைந்த பிரியங்கா காரில் ஏறினார். அவரை தடுக்கும் நோக்கில், அவரது கார் பேனட்டை தர்ஷன் பிடித்துக் கொண்டார்.
அப்போது, பிரியங்கா காரை இயக்கியதால், தர்ஷன் பேனட் மீது குப்புற விழுந்தார்.
ஆயினும் பிரியங்கா விடாமல், 2 கி.மீ., துாரம் காரை வேகமாக ஓட்டினார். தர்ஷன், பேனட்டை கெட்டியாக பிடித்து, அதன் மீது படுத்து கொண்டதால், உயிர் தப்பினார்.
சினிமாவில் வருவது போல நடந்த இந்த காட்சியை கண்டு, மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில இளைஞர்கள், பைக்கில் காரை விரட்டி சென்று மடக்கி நிறுத்தினர்.
கொதிப்படைந்த அப்பகுதியினர், பிரியங்காவின் கார் மீது கற்களை வீசியதில், கண்ணாடிகள் நொறுங்கின.
தகவலறிந்து வந்த ஞானபாரதி போலீசார், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். தர்ஷன், அவரது நண்பர்கள், பிரியங்கா, அவரது கணவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
100 பயங்கரவாதிகள் பலி சோமாலியாவில் அதிரடி
மொகாதிசு: சோமாலியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க, அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில், ‘அல் – குவைதா’ பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘அல்- – ஷபாப்’ அமைப்பு, மத்திய மற்றும் தெற்கு சோமாலியா பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது, பிற பகுதிகளையும் கைப்பற்ற பொதுமக்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த அமைப்புக்கு எதிராக, சோமாலியா அதிபர் ஹாசன் ஷேக் முகமது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அல் – ஷபாப் அமைப்பின் வசம் உள்ள பகுதிகளை, சோமாலியா அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில் சோமாலியாவின் கல்கத் பகுதியில் உள்ள அல் – ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக சோமாலியா அரசு தெரிவித்துள்ளது.
எனினும், இதை அல்- – ஷபாப் அமைப்பினர் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலில், சோமாலியா ராணுவத்தினர் 150க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அது தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் திருட்டு
ஹூஸ்டன்: அமெரிக்காவில் கோவிலுக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டதை அடுத்து, அங்குள்ள ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரசோசில் வசிக்கும் இந்திய சமூகத்தினர், அங்கு ஓம்கார்நாத் கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஒரே கோவில் இது தான். இதற்குள், ௧௧ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர், அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி தப்பிச் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இது குறித்து, கோவில் வாரியக் குழு உறுப்பினர் ஸ்ரீனிவாச சங்கரி கூறியதாவது:
இச்சம்பவத்தால், எங்கள் கோவிலுக்குள் அத்துமீறல் நடந்துள்ளது. இந்த திருட்டால், எங்களின் தனிப்பட்ட உரிமையை இழந்துஉள்ளதாக உணர்கிறோம். இனி, கோவிலின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவோம். இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போலி இன்ஸ்டாகிராம் புதுச்சேரி வாலிபர் கைது
புதுச்சேரி: இளம்பெண் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி அப்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த 20 வயது பெண், மர்ம நபர் தனது பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, எனது தனிப்பட்ட புகைப்படங்கள் பதிவிட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திரன். அதில், பெண்ணின் பெயரில் இன்ஸ்டாகிராம் உருவாக்கி புகைப்படங்களை வெளியிட்டது புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் வேலன் மகன் மணிகண்டன், 23; என்பது தெரியவந்தது.
சென்னையில் பதுங்கியிருந்த மணிகண்டனை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து, இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்க பயன்படுத்திய மொபைல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் எச்சரிக்கை
சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில்; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது சைபர் கிரைம் போலீஸ் தனி கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களில் பெண்களுக்கு எதிரான 4 வழக்குகள் பதிவு செய்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான சமூக வலைதள குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்கள், தங்கள் உறவினர்கள் அல்லது மிக நெருங்கிய நபர்களால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட போட்டோ, வீடியோக்கள் எடுக்கும்போதும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.
திருட்டு வாகனங்களை வாங்கி விற்றவர் கைது
திருபுவனை: திருட்டு வாகனங்களை வாங்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
![]() |
திருபுவனை பகுதியில் பைக்குகளை திருடிய, விழுப்புரம் மாவட்டம் சாணிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி,23; என்பவரை கடந்த டிசம்பர் 1ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருட்டு பைக்குகளை வாங்கி விற்று வந்த விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அடுத்த சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த தசரதன்,34; என்பவரை தேடிவந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரத்தில் பதுங்கியிருந்த தசரதனை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த டாடா ஏஸ் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.
பின்னர் தசரதனை நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மாடு தாக்கி பலி
கொடைக்கானல் :
கொடைக்கானல் மன்னவனுரை சேர்ந்தவர் சுப்பையா 58. மாட்டு பொங்கல் அன்று
வளர்ப்பு மாட்டிற்கு பொங்கல் விழா எடுத்த போது மாடு முட்டியதில் காயம்
அடைந்தார். மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். கொடைக்கானல்
போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்