நாம நிறைய சினிமாக்களில பார்த்திருப்போம்… ஒருவரை கடத்த வேண்டுமென்றால் உடனே குளோரோஃபார்ம் உள்ள கைக்குட்டையை மூக்கு அருசில் வைப்பார்கள். உடனே அந்த நபர் மயங்கி சரிந்து விழுவார். ஒருவேளை நிஜத்திலும் அப்படித்தானா… குளோரோஃபார்மை நம் முகம் அருகே வைத்தால் மயக்கம் வருமா… குளோரோஃபார்ம் என்றால் என்ன… அது எப்படி எல்லாம் உபயோகப்படுகிறது?
மயக்கவியல் மருத்துவர் மதன் சொல்வதைப் பார்ப்போம்…

“குளோரோஃபார்ம் என்பது திரவ வடிவில் இருக்கும். ஆனால் அதை வெளியே வைத்தால் ஆவியாகிவிடும். அதைப் பதப்படுத்தி ஆபரேஷன் செய்யும் முன், அந்த நோயாளிக்கு கொடுப்பார்கள்.
குளோரோஃபார்ம் என்பது ஆரம்ப காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. அதைக் கொடுத்து மயக்கநிலை ஏற்பட்டதும், மற்ற மருந்துகளைக் கொடுத்து அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், அது அறுவை சிகிச்சை முடியும் வரை போதுமானதாக இல்லை. அதன்பிறகு தான் மயக்கத்துக்கு கொடுக்க, புது டெக்னாலஜியுடன் பல மருந்துகளைக் கண்டுபிடித்தார்கள். இப்போதெல்லாம் குளோரோஃபார்ம் உபயோகப்படுத்துவது இல்லை.
சினிமாவில் காட்டுகிறமாதிரி குளோரோஃபார்மை முகத்தில் வைத்தாலே மயக்கம் வந்துவிடாது. அனஸ்தீசியா என்பது முறையாக கொடுக்கப்படும்போது மட்டும்தான் மயக்கநிலை உண்டாகும். அறுவை சிகிச்சை எத்தனை மணி நேரம் நடக்கவிருக்கிறது என்பது தெரிந்து அதுவரைக்கும் நோயாளியை மயக்கத்தில் வைக்க வேண்டும். ஆபரேஷன் முடிந்ததும், நோயாளியை சுயநினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
எனவே, எந்தளவு கொடுக்க வேண்டும் என்று தெரிந்துதான் கொடுக்க வேண்டும். நோயாளியை முழுமையாகப் பரிசோதித்து, அவரது உடலுக்கேற்ற மாதிரிதான் கொடுக்க வேண்டும். இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். மயக்க மருந்தின் அளவு கொஞ்சம் அதிகமானாலும் பிரச்னைதான். அனஸ்தீசியா அதிகமானால் வாந்தி, தலைச்சுற்றல் எல்லாம் வரும்.

குளோரோஃபார்ம் இப்போது உபயோகத்திலேயே இல்லை. மயக்க மருந்துகளை யாரும் நினைத்ததும் கடையில் வாங்கிவிட முடியாது. அறுவை சிகிச்சையின்போது நோயாளியை மயக்கமடையச் செய்வது டாக்டருடைய வேலை. உங்களுக்கு எது நல்லது, அதை எந்தளவு கொடுக்க வேண்டும் என்பது எல்லாமே டாக்டருக்குதான் தெரியும். எனவே, சினிமாவில் காட்டுவதை நம்பி நீங்கள் யாரையும் மயங்க வைக்க முயற்சி செய்ய வேண்டாம். அப்படியே மயக்க நினைத்தாலும், அன்பால் மயக்குங்கள்” என்று கலகலப்பாக முடித்தார் டாக்டர் மதன்.
– நவீன் குமரன்