ஜல்லிக்கட்டை பார்க்க வந்த சிறுவன் காளை முட்டி பலி! துயரத்திலும் பெற்றோரின் மனிதநேயம்!

தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த சிறுவளை காளை முட்டியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தருமபுரி அருகே இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 600 காளைகளும், 400 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், வெகு சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், பாலக்கோடு பூ வியாபாரி சீனிவாசன் என்பவரின் மகன் கோகுல், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக தனது மாமா ஹரியுடன் வந்துள்ளார். அப்போது காளைகள் வெளியே வரும் இடத்தில் நின்று, கோகுல் வேடிக்கை பார்த்துள்ளார். இந்நிலையில், வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளை எதிர்பாராத விதமாக கோகுலின் வலது புறமாக வயிற்றில் குத்தியது.
image
இதில் படுகாயமடைந்த சிறுவன் கோகுல் கீழே சாய்ந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கோகுலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைக்குச் செல்லும் வழியிலேயே கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கோகுலின் பெற்றோர்கள் சிறுவனின் உடலைக் கண்டு கதறி அழுதனர். மேலும் 14 வயதில் சிறுவன் உயிரிழந்ததால், தனது மகன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு கண்களை தானமாக வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயிரிழந்த சிறுவன் கோகுலின் இரு கண்களையும் தானமாக பெற்றுக் கொண்டனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் முறையான பாதுகாப்பு அம்சங்களை போட்டி நடத்துபவர்கள் செய்யவில்லை. இதற்கு முழு காரணம் மாவட்ட நிர்வாகமும், போட்டியை நடத்துபவர்களும் தான். எனது மகன் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தோட தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தந்தை சீனிவாசன் தெரிவித்தார்.
image
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சவம்பவம் தொடர்பாக வி.கே.சசிகலா தமது ட்விட்டரில் பதிவில், ”தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காணவந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற 15 வயது சிறுவனை எதிர்பாராதவிதமாக காளை முட்டியதில், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
சிறுவன் கோகுலை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.