வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ” தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ரகசிய திட்டத்தை வைத்து கொண்டு மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ”, என மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு(டபிள்யு .எப்.ஐ.) தலைவராக பிரிஜ் பூஷன் சிங் சரண் உள்ளார். பா.ஜ.,வை சேர்ந்த இவர், உ.பி.,யின் காசிரங்ஜ் தொகுதி எம்.பி., ஆக உள்ளார். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கூறி வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்த போராட்டமானது, வீரர்களின் நலனுக்காகவோ அல்லது இந்தியாவில் நல்ல மல்யுத்தத்தை ஊக்குவிப்பதற்காகவோ நடக்கவில்லை.
தற்போதைய மல்யுத்த சங்கத்தின் நேர்மையான மற்றும் கண்டிப்பான நிர்வாகத்தை அகற்றுவதற்கும், அத்தகைய பாதகமான சூழ்நிலையை உருவாக்க சதி செய்யவும், அழுத்தத்தை ஏற்படுத்தவும் தனிப்பட்ட மற்றும் ரகசிய திட்டங்களை கொண்டது. சட்டப்படி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு மூலம் மல்யுத்த சங்கம் செயல்படுகிறது.

இதனால், தலைவர் உட்பட யாரும் சங்கத்தை தவறாக வழிநடத்த முடியாது. தலைவர் உள்ளிட்ட அனைவரும், வீரர்களின் நலனை மனதில் வைத்து செயல்பட்டுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் மல்யுத்த விளையாட்டின் பெயரை, சங்கம் மேம்படுத்தி உள்ளது. மல்யுத்த போட்டியில் சாதனை படைப்பது என்பது, கண்டிப்பான, நியாயமான, ஆதரவான மல்யுத்த சங்கம் நிர்வாகம் இல்லாமல் சாத்தியம் கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement