பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்திலுள்ள பஹுவாரா கிராமத்தில் வியாழக்கிழமை அன்ரு திருமணவிழா ஒன்று நடந்திருக்கிறது. அதில் கலந்துகொண்டவர்கள் ஆடல், பாடல் எனக் கொண்டாடியிருக்கிறார்கள். அதில் 18 வயதான பிரசாந்த் குமார், 20 வயதான பிரதீக் குமார் ஆகியோரும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 10 வயது சிறுமியும், அவரின் நண்பர்களும் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிரசாந்த் குமார் பிரதீக் குமார் இருவரும், சிறுமிகளைத் தங்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.

ஆனால் சிறுமியும், அவரின் நண்பர்களும் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை திருமணவிழாவில் அவர்களுடன் நடனமாட மறுத்த சிறுமியைப் பழிவாங்கத் தீர்மானித்திருக்கிறார்கள். மறுநாள் காலை சிறுமி காலைக்கடன் கழிக்க வெளியே சென்றபோது, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சிறுமியின் வாயை மூடி தூக்கிச்சென்று, தனிமையான இடத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருக்கிறார்கள்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் குடும்பத்தினர் விரைந்து வந்து சிறுமியைக் காப்பாற்றினர். சிறுமி, ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், மேலும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமியைத் தீவைத்து எரித்த பிறகு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறது.