ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 109 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள வீர் நாராயன் சிங் சர்வதேச மைதானத்தில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
இதனையடுத்து நியூசி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணி வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். துவக்கவீரராக களமிறங்கிய பின் ஆலன் 0, கன்வே 7, ஹென்றி நிக்கோலஸ் 2, மிச்சல்1, கேப்டன் டாம் லாதம் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியின் பிலிப்ஸ் அதிகபட்சமாக 36, மிச்சல் சான்ட்நர் 27, பிரேஸ்வெல் 22 ரன்கள் எடுத்தனர். பெர்குசன் 1, டிக்னர் 2 ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் முகமது ஷமி 3, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
108 ரன் இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 111ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் வென்றது.

ரோகித்தால் சிரிப்பலை
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றார். உடனே, பேட்டிங் செய்யலாமா அல்லது பவுலிங் செய்யலாமா என குழப்பம் ஏற்பட சில வினாடிகள் தலையில் கைவைத்து யோசித்தார். அதன் பிறகே பவுலிங் என முடிவு செய்தார். இதனை நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம், பின்னால் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்களும் சிரித்தவாறு பார்த்து கொண்டிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement