புதுடெல்லி: பழைய பென்சன் முறையை கேட்டு நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்து உள்ளன. நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கேட்டு போராட்டம் நடக்கிறது. பஞ்சாப், இமாச்சல், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அதை அமல்படுத்தி விட்டன. இதேபோல் ஒன்றிய அரசும் அமல்படுத்த கேட்டு 50 ஒன்றிய அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் மாநில அரசு சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய கூட்டு நடவடிக்கை குழு என்ற பெயரில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துவது என்றும், உரிய அதிகாரிகளிடம் மனு அளிப்பது என்றும் ஏற்காவிட்டால் வரும் ஜூலையில் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது என்றும் அறிவிக்கப்பட்டது.
