10ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து ரசிப்பு ‘லவ் டுடே’ பாணியில் சிக்கிய டிரைவரின் லீலை: செல்போனை மாற்றியபோது குட்டு வெளிவந்ததால் திருமணத்தை நிறுத்திய காதலி

சேலம்: பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் பிடித்து செல்போனில் வைத்திருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்,  ‘லவ் டுடே’ பட பாணியில் செல்போனை மாற்றிக் கொடுத்த போது சிக்கி கொண்டதால், திருமணத்தை காதலி நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள பேளூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அரவிந்த் (24), ஆம்புலன்ஸ் டிரைவர். இவர், வாழப்பாடி அரசு மருத்துவமனை பகுதியில், ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக, அதே பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவரை காதலித்து வந்த அரவிந்த், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள, சமீபத்தில் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயம் செய்துள்ளார்.  

இந்த சூழலில், சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் வருவது போல், நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகள் அரவிந்த்தும், அந்த நர்சும் தங்களது செல்போன்களை மாற்றிக் கொண்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பு, தங்களுக்குள் எவ்வித ரகசியங்களும் இருக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்வதற்காக, இப்படி மாற்றிக் கொண்டுள்ளனர். இதனிடையே, அரவிந்த்தின் செல்போனை வாங்கிச் சென்ற நர்ஸ், அதனை அலசி ஆராய்ந்த போது, அரவிந்தின் வீடியோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த வீடியோவில், அவரது காதலன் அரவிந்த், 15 வயதான 10ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசுவது பதிவாகியிருந்தது. அந்த மாணவியிடம் கொஞ்சி பேசும் அரவிந்த், அவரது ஆடைகளை களையச் செய்து, அரை நிர்வாணமாக நிற்க வைத்து ரசித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நர்ஸ், உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு, நடந்தவை பற்றி கூறியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர், அந்த செல்போனை வாங்கிக் கொண்டு, வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில், அரவிந்த் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில், விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதனிடையே, தங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடம் நர்ஸ் தெரிவித்து  உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.