ரூ.1200 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் விரைவில் திறப்பு: புகைப்படங்களை வெளியிட்டது ஒன்றிய அரசு

புதுடெல்லி: அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படங்கள் மற்றும் வரைபடத்தை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகப்போவதையொட்டி, புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்படி, ராஜபாதை சீரமைப்பு, துணை ஜனாதிபதி, பிரதமர் இல்லங்கள் உள்ளிட்ட புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.1200 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த டிசம்பர் 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ள நிலையில், விரைவில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படம் மற்றும் வரைபடங்கள் சென்ட்ரல் விஸ்டா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு கருப்பொருளுடன் கட்டப்பட்டுள்ளது. அதன்படி, 384 இருக்கைகள் கொண்ட மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற கருப்பொருளின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் பிரமாண்ட பெரிய அரங்குகள், நூலகம், குழு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளிலும் நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்படுகின்றன. அதிநவீன அரசியலமைப்பு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையும் பிராந்திய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களுடன் நவீன இந்தியாவின் பலத்தையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* புதிய நாடாளுமன்ற கட்டிடம் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் கட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அனைத்து கட்டமைப்புகளும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உருவாக்கப்பட்டுள்ள வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.