டோமினிக்காவைச் சேர்ந்தவர் எல்விஸ் ஃப்ரான்கொஸ் (Elvis Francois). மாலுமியான இவர், நெதர்லாண்ட்ஸ் அன்டில்ஸ் பகுதியிலிருக்கும் மார்டின்ஸ் தீவில் படகை பழுத்துப்பார்த்து கொண்டிருக்கும் போது, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர் கரீபியன் கடலில் தத்தளித்து வந்திருக்கிறார். நண்பர்களை உதவிக்காக அழைத்திருக்கிறார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
இறுதியில் அவர் ‘Help’ எனும் ஆங்கில வார்த்தையைப் படகின் பக்கவாட்டில் எழுதிவைத்துக் காத்திருந்தார். ஒரு விமானம் அவரைக் கடந்தபோது, கண்ணாடி மூலம் ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து அதன் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார். அதைப் பார்த்த அதிகாரிகள், உதவிக்காகக் காத்திருப்பதை உறுதிப்படுத்தினார். அதிகாரிகள் கொடுத்த தகவல் மூலம், கொலம்பியக் கடற்படை அவரைக் கண்டுபிடித்து மீட்டது.

இந்த நிலையில், எல்விஸ் ஃப்ரான்கொஸ் இது தொடர்பாக பேசிய வீடியோவில், “24 நாட்கள் நிலம் இருப்பதற்கான தடயமே இல்லை. நான் எங்கிருக்கிறேன் என்றும், எனக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. 24 நாள்களாக கெட்ச்சப் (ketchup), பூண்டுப் பொடி, மேகி ஆகியவற்றை உட்கொண்டு உயிர் வாழ்ந்தேன். அந்த நாள்கள் மிகவும் கடினமானது. ஒரு கட்டத்தில் என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். என் குடும்பத்தை பற்றி சிந்தித்து பார்த்தேன். நான் வசிக்கும் நெதர்லாண்ட்ஸ் அன்டில்ஸ் பகுதியிலிருக்கும் மார்டின்ஸ் தீவில் என் படகை பழுத்துப்பார்த்து கொண்டிருக்கையில், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டேன். நான் கடற்கரையை அடைய எவ்வளவோ முயன்றேன். என் நண்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. காத்திருப்பது தவிர வேறு எந்தவழியும் எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த புதன்கிழமை (18-1-2023) கொலம்பியா கடற்படை அவரை வடமேற்கு பகுதியிலுள்ள லா குஅஜிரா என்னும் இடத்திலிருந்து மீட்டனர். இந்த இடம் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது. எல்விஸுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர் மீண்டும் டோமினிக்காவிற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.