“40 வருஷமா மூணு சக்கர வண்டி ஓட்டுறேன்!’’ – 70 வயது எனர்ஜி டானிக் கண்ணம்மா

“சாத்திரம் வீழ்த்தி கண்ணம்மா… மார்தட்டும் அளவிற்கு சரித்திரம் பேசுகிறாய்!” என்று முரசு கொட்டலாம், கண்ணம்மா என்கிற ரத்தினாம்பாளின் மூன்று சக்கர வண்டியுடனான 40 வருட பயணத்தை பார்க்கும்போது. தன்னுடைய 30 வயதில் கணவரின் உதவியோடு அந்த வண்டியை ஓட்டத் தொடங்கிய கண்ணம்மாவுக்கு இப்போது வயது 70.

செஞ்சியில் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மா. இப்போது பெரியகரம் பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். குடும்பம் விவசாயப் பின்னணியை கொண்டது. இளம் பருவத்தில் கழனி கூலிவேலை செய்து வந்தார். ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த நஜீர், கண்ணம்மா வசிக்கும் தெருவிலேயே வசித்து வந்தார். பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளை பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார் நஜீர். அவரின் மனைவி காசநோயால் இறக்க, கண்ணம்மாவை மணம் செய்தார்.

தினசரிப் பணிகளில் கண்ணம்மா

திருமணமானது முதலே கூலி வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, கணவருக்கு பேருந்துகளை பழுது பார்க்கும் வேலைகளில் உதவியாக இருக்கத் தொடங்கினார் கண்ணம்மா. கணவர் நஜீர், அப்போதுதான் கண்ணம்மாவுக்கு லோடு வண்டியை இழுக்கக் கற்றுக் கொடுத்தார். மூன்று நாள்களில் நன்றாக ஓட்டக் கற்றுக் கொண்டார் கண்ணம்மா. பேருந்து நிலையங்களில் வந்து இறங்கும் மருந்துப் பெட்டிகளை தனது மூன்று சக்கர வண்டியில் கொண்டு சென்று, செஞ்சி பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் சேர்ப்பார். நஜீர் இறந்தபோது, கண்ணம்மாவுக்கு லோடு வண்டி ஓட்டுவதில் 18 வருட அனுபவம் இருந்தது.

கண்ணம்மா தினமும் காலை 10 மணிக்கு வண்டியை மிதித்துக் கொண்டு ஒரு கி.மீ. தொலைவில் உள்ள செஞ்சி பேருந்து நிலையத்துக்குச் செல்வார். அங்கு, தனியார் பேருந்துகளில் வந்து இறங்கும் மருந்துப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு உரிய மருந்தகங்களில் சேர்ப்பது அவரது தினசரி வேலை. ஒரு பெட்டிக்கு 10 ரூபாய் கிடைக்கும்.

“அப்போவெல்லாம் 50 பெட்டிகள்கூட வந்ததுண்டு. இப்போ 2-5 பெட்டிகள் தான் வருது. சில நாள் அதுவும் இல்லாம போகலாம்” என்கிறார் கண்ணம்மா. கணவர் இறந்த பிறகு வேறு வேலைக்குச் செல்லவில்லை. “அவரோட நினைவா என்கிட்ட இருக்குற இந்த வண்டியை விட்டுவிட்டு வேறு வேலை செய்ய மனசு வரல’’ என்பது கண்ணம்மா சொல்லும் காரணம்.

கடும் உழைப்புக்கு நடுவில் பசியாறும் கண்ணம்மா!

“எனக்குக் குழந்தை இல்ல. என் கணவருக்கும் அவரோட முதல் மனைவிக்கும் பிறந்த மூணு பொம்பளப்புள்ளைகளுக்கும் வண்டி இழுத்து சம்பாதிச்சு கல்யாணம் பண்ணி வெச்சேன். ஆனாலும் யாருகிட்டயும் எதையும் எதிர்பார்க்கிறதில்ல. இதுக்கு முன்னாடி ஏரிக்கரை பகுதியில ஒரு சொந்த வீடு இருந்தது. ரோடு போடுறதுக்காக அதை கவர்மென்ட்டு எடுத்துக்கிச்சு. இழப்பீடும் கெடைக்கல. இப்போ வாடகை வீட்லதான் வசிக்கிறேன்’’ – வாழ்க்கை மீது எந்தப் புகாரும் இல்லாத வார்த்தைகள்.

முதுமையைத் தவிர எந்த நோயும் கண்ணம்மாவை எட்டிப்பார்க்கவில்லை. ’’70 வயசாச்சு, இன்னும் ஏன் வண்டி ஓட்டுறனு பலரும் என்னை கேட்பாங்க. எனக்கு நான்தானே இருக்கேன்? முடியுற வரை ஓட்டுவோம். இந்த வண்டி என்கூட இருக்குறது என் வீட்டுக்காரர் கூட இருக்குறது மாதிரி. அதனாலேயே என்னவோ இன்னிக்கு வரை கஷ்டம் தெரியல’’ என்கிறார்.

70 வயதிலும் சுறுசுறுப்பாக சுழலும் கண்ணம்மா

“40 வருஷமா தினமும் வண்டி ஓட்டுறேன். கால் முட்டியில கட்டியிருந்து ஒருமுறை ஆபரேஷன் செஞ்சுக்கிட்டேன். அதுக்காகவெல்லாம் என் வண்டி சக்கரம் ஓயல. ஞாயித்துக்கிழமை என் வண்டியை சுத்தம் செஞ்சு எண்ணெய் விடுவேன். நானும் என் வண்டியும் இன்னும் எத்தனை வருஷம் ஓடணுமோ தெரியலையில்ல..?!’’ – சர்ரென்று பெடலை மிதிக்கிறார் கண்ணம்மா.

அவரது தன்னம்பிக்கை சுற்றுகிறது சக்கரங்களில்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.