தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா, கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதன்காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிப்ரவரி 27-ல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படாமல் இரண்டு நாள்களாக ஆலோசனை நடைபெற்றுவந்தது.

இதற்கிடையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இடைத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், தன்னுடைய இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்குமாறு கே.எஸ்.அழகிரி, தேசிய தலைமையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுமதியளித்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.