பெங்களூருவில் ஜி20 முதல் சுற்றுச்சூழல், காலநிலை கூட்டம்!

ஜி20-ன் முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

ஜி20 தலைமைத்துவப் பொறுப்பை வருகிற நவம்பர் 30ஆம் தேதி வரை ஓராண்டிற்கு இந்தியா ஏற்றிருக்கும். இந்த மன்றம் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் இந்தியாவால் அழைக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளை ஒன்றிணைக்கும். ஷெர்பா (பிரதிநிதி) கூட்டம் மூலம், 13 பணிக்குழுக்கள் மற்றும் 2 முன்முயற்சிகள் கட்டமைப்பு, இந்தியாவின் தலைமையின் கீழ் கூடி முன்னுரிமைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும். சுற்றுச்சூழல், காலநிலை நிலைத்தன்மை ஆகியவை ஷெர்பா (பிரதிநிதி) கூட்டத்தின் கீழ் பணிபுரியும் குழுக்களில் ஒன்றாகும்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் நான்கு கூட்டங்கள், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பணிக்குழு கூட்டத்தில் நடைபெறும் விவாதங்கள், ‘கடலோர நிலைத்தன்மையுடன் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்’, ‘தரிசு நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல்’, ‘பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல்’ மற்றும் ‘சுழற்சிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்’ போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

இந்த நிலையில், ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் முதல் ஜி20 சுற்றுச்சூழல் கூட்டம் பிப்ரவரி 9 முதல் 11 வரை பெங்களூரு, தி தாஜ் வெஸ்ட் எண்டில் நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டமாக பெங்களூருவில் மைசூரு உயிரியல் பூங்கா மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஒருங்கிணைப்பில், ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளில் இந்திய உயிரியல் பூங்கா இயக்குநர்களுக்கான இரண்டு நாள் தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவில் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் உயிரியல் பூங்காக்களில் ஒன்றான மைசூரு உயிரியல் பூங்காவில் இம்மாநாடு நடைபெற்றது. இந்தியாவில் உள்ள இரண்டு உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை தத்தெடுக்கும் தனித்துவமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதில் இதுவும் ஒன்றாகும். இந்த மாநாட்டில், “முதன்மைத்திட்டம், இனங்கள் மேலாண்மை மற்றும் பாதுகாப்பான இனப்பெருக்கத்திற்கான தேசிய திறனை உருவாக்குதல்” போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு நடைமுறைகளில் கவனத்தை ஈர்ப்பதில் இந்த மாநாடு வெற்றி கண்டது. இந்த மாநாட்டில் 25 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 59 பேர் பங்கேற்றனர். இதனை மைசூரு மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.

எதிர்வரவுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான முதல் ஜி20 பணிக்குழு கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்த, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் லீனா நந்தன், கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் வந்திதா ஷர்மா ஆகியோர் கடந்த 21ஆம் தேதி பெங்களூருவில் சந்தித்துப் பேசினர். அதில் வர்த்தக முத்திரை, பாதுகாப்பு, இடம் மேலாண்மை, கர்நாடகாவின் பாரம்பரியங்கள் போன்றவற்றைக் காட்டும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பிற அடிப்படை ஏற்பாடுகள் தொடர்பான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தை சிறப்பிக்கும் வகையில் முக்கிய இடங்களில் வர்த்தக முத்திரை குறியீட்டு இடங்களை வழங்குமாறு மாநில அரசை திருமதி நந்தன் கேட்டுக்கொண்டார். பெங்களூரு மற்றும் அதன் பசுமையான சுற்றுப்புற சூழலைப் பாராட்டிய மத்திய செயலர், பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு ஜி20 பிரதிநிதிகளின் பயண ஏற்பாடுகளை சிறப்பாக செய்யுமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தை பெரிய அளவில் வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாக தலைமைச் செயலாளர் உறுதியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.