ரெண்டு அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன்? பிடிஆரை சீண்டிய செல்லூர் ராஜு!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மதுரை காமராஜர் சாலைப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சரும் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசும்போது “தி.மு.க. பல்வேறு திட்டங்களை கொண்டுவருதாக கூறி, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை மூடுவிழா காண வைத்துவிட்டனர். பெண்களின் கஷ்டத்தை உணர்ந்த ஜெயலலிதா மிக்சி, கிரைண்டர் திட்டத்தை கொண்டு வந்தார். பெண் சிசுக்கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது. சிசுக்கொலையை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

இப்படி தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் அவர்கள் ஆட்சி காலத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். அதே வழியில் எடப்பாடியாரும் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாத்துவது போல் தி.மு.க.,வினர் வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திவிட்டனர்.

அதிமுக ஆட்சி போறதுக்கு காரணமே அரசு ஊழியர்கள் தான். ஆனால் அவர்களுக்கும் தி.மு.க., அரசு அல்வா கொடுத்துவிட்டது. தி.மு.க., ஆட்சியில் பால் விலை முதல் பருப்பு விலை வரை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. அதேபோல் போதைப் பொருள்கள் விற்பனையும் தலை தூக்கியுள்ளது. மதுரையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் தங்கள் மாவட்டத்துக்கு அவர்கள் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

ஆனால் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பறக்கும் பாலம் முதல் விரைவுச் சாலைகள் வரை பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். எங்களை காலில் விழுந்ததாக கிண்டல் செய்த தற்போதைய அமைச்சர்கள் உதயநிதி காலில் விழுகின்றனர். இனி இன்ப நிதி காலிலும் விழுவார்கள் போல. ரெட் ஜெயிண்ட் மூலம் சினிமா துறையையே கையில் வைத்துள்ளனர்.

20 மாதத்தில் 20 ஆயிரம் கோடி பணத்தை சம்பாதித்துள்ளதாக திருமாவே திருவாய் மலர்ந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மக்கள் கஷ்டப்பட்டார்கள். என் மனைவி கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்கலங்கினார். “நான் இறந்துவிடுவேன்” என நகை, நட்டெல்லாம் கழட்டி வைத்துவிட்டார். ஆனால் நான் அவருக்கு தோள் கொடுத்து ஒரே அறையில் ஆதராவாக இருந்தேன். அந்த சமயத்தில் உயிரை பணயம் வைத்து எடப்பாடியார் தமிழகமெங்கும் சுற்றி வந்தார். ஆனால் அந்த சமயத்தில் பணியாற்றிய மருத்துவ ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்” என்று செல்லூர் ராஜு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.