மைசூர்: சிறுத்தை தாக்கி சிறுவன் பலி; 2 நாள்களில் இருவர் பலி – வயதான சிறுத்தையால் தொடரும் மரணங்கள்?

கர்நாடக மாநிலம், மைசூர் டி.நரசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. டிசம்பர் மாதம் குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, நாய், ஆட்டுக்குட்டி உள்ளிட்டவற்றை கொன்றது. வனத்துறை கண்காணிப்பு மேற்கொண்டிருந்த நிலையில் டிசம்பர் 1-ம் தேதி, கெப்பேஹண்டி கிராமத்தைச் சேர்ந்த அரசுக் கல்லுாரி இறுதியாண்டு மாணவி மேகனா (20) வீட்டின் பின்பக்கம் நின்றிருந்தபோது, அங்கு வந்த சிறுத்தை மேகனாவைக் கொடூரமாகத் தாக்கி, 200 மீட்டர் வரையில் அருகிலுள்ள விளைநிலத்துக்கு தரதரவென இழுத்துச் சென்று கொன்றது. இந்தச் சம்பவம், கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இரண்டு நாள்களில் இரண்டு பேர் பலி!

இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி, மேகனா வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கன்னையாகனஹள்ளியில், சித்தம்மா என்பவர் வீட்டின் பின்பக்கம் விறகு எடுத்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை, சித்தம்மாவைத் தாக்கி, 300 மீட்டர் வரையில் இழுத்துச் சென்று கொன்றது. இந்தத் துயர சம்பவத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் நேற்று, இந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ஹோரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த, 11 வயது சிறுவன் ஜெயந்த்தை சிறுத்தை தாக்கிக் கொன்றது கண்டறியப்பட்டது மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

உயிரிழந்த சிறுவன் ஜெயந்த்

நேற்று மாலை, வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜெயந்த்தைக் காணவில்லை என அவனின் பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்திருந்த நிலையில் போலீஸார், மக்கள், வனத்துறையினர் ஜெயந்த்தைத் தேடினர். நேற்றிரவு அவரது வீட்டிலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஜெயந்த்தை சடலமாக மீட்டனர். சிறுவனைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை, அவனின் உடலை இரண்டு கிலோமீட்டர் இழுத்துச் சென்றது தெரியவந்தது.

மூன்று மாதங்களில் நால்வர் பலியான சோகம்…

மைசூர் மாவட்டம், டி.நரசிபுரம் தாலுகாவில், 48 மணி நேரத்தில் இரண்டு பேர் பலியானதுடன், அக்டோபர் இறுதி முதல் இதுவரையில், நான்கு பேர் பலியாகியிருக்கின்றனர். இதனால், வெகுண்டெழுந்த மக்கள், ‘எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் கர்நாடக அரசும், வனத்துறையும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்’ எனக் கூறி, இன்று காலை, டி.நரசிபுரத்திலுள்ள ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், போலீஸார் சமாதானம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

கட்சிகள் கடும் விமர்சனம்!

‘சிறுத்தை தாக்கி யாராவது இறந்தால், இறப்பவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இழப்பீடு மட்டுமே அறிவிக்கிறார். ஆனால், சிறுத்தையைப் பிடிக்காமல், மக்கள் உயிருக்குப் பாதுகாப்பளித்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்காமல், கர்நாடக பா.ஜ.க அரசும், மைசூர் வனத்துறையும் அலட்சியமாக இருக்கின்றன’ என காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினர், ஆளும் பா.ஜ.க கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிறுத்தை

அங்குள்ள மக்களிடம் இது குறித்து விசாரித்தோம், “ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர், டி.நரசிபுரம் பகுதியில், நான்கு இடங்களில் கூண்டு வைத்தனர். சிறுத்தையைக் கண்டதும் சுட்டுக்கொல்ல அறிவிப்பும் வெளியிட்டனர். ஆனால், முறையாகக் கண்காணிப்பு மேற்கொள்ளாமல், வனத்துறை மெத்தனமாக இருப்பதால், மூன்று மாதங்களில் நான்கு பேரை பறிகொடுத்திருக்கிறோம். நிம்மதியாக வீட்டில் உறங்க முடியவில்லை, எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும். ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க வேண்டும்” என்றனர்.

வேட்டைத்திறனை இழந்த சிறுத்தை!

மைசூர், பெங்களூரிலுள்ள வனத்துறை முன்னாள் கள இயக்குநர்கள் சிலரிடம் பேசினோம். ‘’10–12 வயதைக் கடந்த சிறுத்தைக்கு கால்களில் காயம், உடலின் புண் எற்பட்டிருந்தால் அவற்றால், இளம் சிறுத்தைகளைப்போல வேட்டையாட முடியாது. மேலும், சில சிறுத்தைகளுக்கு வேட்டையாடும்போதோ, சண்டையின்போதோ, வேட்டையாட அத்தியாவசியமான கோரைப்பற்கள், நகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், காட்டுயிர்களை வேட்டையாடுவது கடினம்.

சிறுத்தை

இது போன்ற பாதிப்புகளைச் சந்தித்த வயதான, வேட்டைத்திறன் இழந்த சிறுத்தைதான் மைசூரில் உலா வருகிறது. இந்த சிறுத்தையைப் பிடித்து மீண்டும் அடர் வனத்தில் விடுவித்தாலும் மீண்டும் குடியிருப்புகளைத்தேடி வெளியேறும் அல்லது உணவு கிடைக்காமல் மரணிக்கும்; சிறுத்தையைப் பிடித்து Zoo-வில் பராமரிப்பது நல்லது’’ என்றனர்.

தொடரும் உயிரிழப்புகள், நடவடிக்கை என்ன… என்பது குறித்து விசாரிக்க, மைசூர் வனக்கோட்ட வன உயிரின பாதுகாவலர் மாலதி பிரியாவை, பலமுறை போனில் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. மைசூரில் சிறுத்தை விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.