மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் நிலவுவதால் மூணாறில் நதிகள் உறைந்தன: கடும் குளிரை அனுபவிக்க குவியும் சுற்றுலாப்பயணிகள்

மூணாறு: மூணாறில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவும் சூழலில், இந்த வித்தியாசமான தட்பவெப்ப நிலையை ரசித்து அனுபவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் தென்னகத்து காஷ்மீர்’ என்றழைக்கப்படும் மூணாறில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இதில், டிசம்பர் இறுதி முதல் ஜன. 15 வரை மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறி பனிப்பொழிவு இருக்கும். கடந்த டிசம்பர் இறுதியில் இருந்தே மூணாறில் உறைபனி மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறியது. ஓடைகள், ஆறுகளில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிற அளவுக்கு தற்போது நிலைமை மாறியுள்ளது. இதுபோன்ற தட்பவெப்ப நிலையை ரசித்து, அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை நிலவியது. குண்டளை, தேவிகுளம், லாக்காடு, தென்மலை, செண்டுவாரை, லட்சுமி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. இதனால் அதிகாலையில் தேயிலை தோட்டங்கள் மற்றும் புல் மேடுகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. இந்த சீசனில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுவாகும். மேலும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும் உள்ளது.

மூணாறு நகர், கன்னிமலை, செண்டுவாரை, சொக்கநாடு, பாம்படும்சோலை, லட்சுமி போன்ற இடங்களில் மைனஸ் 1 டிகிரியாக இருந்தது. பாம்பாடும்சோலை, கன்னிமலை, லாக்காடு, தேவிகுளம் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு குளிர் மைனஸ் டிகிரியானதால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த உறைபனி சீசனை அனுபவிக்க வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அங்கு சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.