ஹிட்லரின் கதிதான் பிரதமர் மோடிக்கும்; சித்தராமையா காட்டம்.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது.

இதன் பின்னணியில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி எம்.எல்.ஏக்கள் விலை போன சம்பவமும், இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிகழ்வும் அரங்கேறின. அதன்பிறகு எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என இரண்டு பாஜக முதல்வர்கள் பதவி வகித்தனர். இந்த சூழலில் தான் 2023 சட்டப்பேரவை வரவுள்ளது. கடந்த தேர்தலை போல இல்லாமல் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இம்முறை கூட்டணி கணக்குகள் மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் பாஜக கைகோர்க்குமா எனக் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என அக்கட்சி தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனவே பாஜக தனித்து களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. 200 யுனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.

இந்தநிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘அவர் பிரதமர், இங்கு வரட்டும். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பாஜக ஆட்சிக்கு வரும் என்று நூறு முறை சொன்னாலும் அது நடக்காது என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

இதை மக்கள் நம்ப மாட்டார்கள், ஹிட்லருக்கு என்ன ஆனது? சில நாட்கள் ஆடம்பரமாக நடந்தார். ஆனால் முடிவு மோசமாக இருந்தது. சர்வாதிகாரி முசோலினி மற்றும் பிராங்கோவுக்கு என்ன ஆனது? அதேபோல் தான் பிரதமர் மோடியும் சில நாட்கள் மட்டும் இப்படியே சுற்றித் திரிவார்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, “இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் மோடியின் ஆளுமை தெரியும். யாரோ எதையாவது சொல்லி எதுவும் செய்ய மாட்டார்கள். குஜராத்தில் கூட இப்படித்தான் பேசினார்கள், இன்னும் அவர் அதிகபட்ச வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அதுதான் இங்கும் நடக்கும்,” என்றார் முதல்வர்.

திருப்பதியில் பெரிய ஷாக்… மர்ம ட்ரோன், வைரலான வீடியோ- பதறி போன தேவஸ்தானம்!

இதற்கிடையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “அவர்களின் கட்சி என்ன? இன்றும், கார்கேவை கட்சித் தலைவராக ஏற்க சித்தராமையா தயாராக இல்லை. ராகுல் காந்தியின் சித்தாந்தங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்கிறார். மாறாக, மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், நியமிக்கப்படவில்லை. அவர் எந்த காந்தி பரிவாரத்தைச் சேர்ந்தவரும் அல்ல” என்றார் அமைச்சர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.