ஆளுநர் மாளிகையை ஆஸ்பத்திரியாக மாற்றிவிடலாம்… வைகோ யோசனை!

மதுரையிலிருந்து சென்னை செல்ல வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

எண்ணற்ற மக்கள்நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. இப்போது நடைபெற போகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவினுடைய ஆதரவை பெற்ற காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் மண்ணில் திராவிட இயக்க பூமியில் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

அவர்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஒவ்வொரு ஊரிலும் கொடியேற்ற செய்யலாம் பணம் கொடுத்து ஒரு கிளையை அமைக்க பார்க்கலாம். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. என்னுடைய ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகம் பண்படுத்தப்பட்டிருக்கிறது., இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது.

நாளும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி., ‘வீடு தேடி மக்களுக்கு மருத்துவம்’ போன்ற இதுவரை இல்லாத பல மாநிலங்களில் முயற்சிக்காத திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. ஆகவே இந்த அரசு மக்கள் செல்வாக்கை நாளுக்கு நாள் அதிகம் பெற்று வருகிறது என்று வைகோ தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ரவியின் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு குறித்த கேள்விக்கு.?

ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய ஒன்று. ஆச்சாரியா அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது, அரசியலில் ஓய்ந்து போய் தோற்றுப் போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த ஆளுநர் மாளிகைகள் உருவாக்கப்பட்டன. இதை ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்கள்.

தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிற ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாளும் பேசி வருகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது அதற்கு எப்படியாவது அதை மறைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான விளக்கங்களை பேசிக்கொண்டிருக்கிறார் . அதிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது நன்றாக புரிகின்றது.

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் பாஜக ஆதரவு நிலைப்பாடு குறித்த கேள்விக்கு.?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன் என்று வைகோ கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.