2022-ல் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். ஆனால், இதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

அப்போதிலிருந்து பிரதமர் மோடிமீதான விமர்சனத்தைக் குறைத்துக்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதையடுத்து மொத்தமாக மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்திவிட்டதாகப் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி, காங்கிரஸை வீழ்த்த மோடியும், மம்தா பானர்ஜியும் ஒப்பந்தம் போட்டுவிட்டதாக விமர்சித்திருக்கிறார்.

மோடி, மம்தா குறித்து இன்று பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைப் பல தலைவர்கள் பாராட்டியிருக்கின்றனர். ஆனால் அவர்(மம்தா பானர்ஜி) இன்னும் பாராட்டவில்லை. மம்தா பானர்ஜிக்கும் மோடிக்கும் இடையே ‘மோ-மோ’ புரிந்துணர்வு இருக்கிறது.

மோடி, காங்கிரஸ் முக்த் பாரத் என்று கூறும்போது, வங்காளத்திலிருந்து காங்கிரஸை அகற்றவேண்டும் என்று மம்தாவும் கூறுகிறார். மம்தா பானர்ஜி, மோடிக்கு தகவல் கொடுப்பதன் மூலம் காங்கிரஸைப் பலவீனப்படுத்த விரும்புகிறார். மம்தா பானர்ஜி தன் கட்சித் தலைவர்களை, சிபிஐ, அமலாக்கத்துறையிடமிருந்து காப்பாற்ற மோடி முன் அடிபணிந்துவிட்டார்” என்று கூறினார்.