திருமலை: தெலங்கானாவில் உள்ள 6 மாடி கட்டிட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ராம்கோபால் நகரில் டெக்கான் ஸ்போர்ட்ஸ் எனப்படும் தனியாருக்கு சொந்தமான 6 மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.
இருப்பினும் அந்த வளாகத்திற்குள் 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நேற்று விடியவிடிய 2வது நாளாக தீப்பற்றி எரிந்தது. கட்டிடத்திற்குள் சிக்கிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது. கட்டிடத்தின் உள் பகுதிக்குள் சென்று 3 பேரை தேடினர். அப்போது தீயில் கருகிய நிலையில் 3 பேரும் சடலங்களாக கிடந்தனர். இதையடுத்து சடலங்களையும் மீட்டு ராம்கோபால் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சடலங்களை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகியிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே தீ விபத்து நடந்த அந்த வணிக வளாகத்தை கிரேன் மூலம் மாநகராட்சி உயரதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது கட்டிடத்தின் ஸ்திர தன்மை பலவீனமானது தெரியவந்ததால் தனை இடிக்க கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.