காட்டு யானை தாக்கி முதியவர் பலி; உடலை எடுத்துசெல்ல விடாமல் தொழிலாளர்கள் போராட்டம்: கூடலூர் அருகே பரபரப்பு

கூடலூர்: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார். அவரது உடலை எடுத்து செல்ல விடாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட டெல்ஹவுஸ் தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர் குடியிருப்பில் ஓய்வு பெற்ற தொழிலாளி சிவனாண்டி (62). இவர் தனது மனைவி பெருமாயி, மகன்கள் சிவகுமார், ராஜகுமார் ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று காலை சிவனாண்டி, விறகு எடுத்து வருவருதாக கூறி வெளியே சென்றார். மதியம் ஆகியும் சிவனாண்டி, வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர்.

அப்போது தேயிலைத் தோட்டத்தில் 10ம் நம்பர் பகுதியில் சிவனாண்டி யானை தாக்கி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனச்சரகர்கள் வீரமணி, சஞ்சீவி, ரவி, அய்யனார், வனவர்கள் சுதீர் குமார், சுபேத்குமார், பிரவீன்சன், சுரேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வனத்துறை வாகனத்தில் உடலை ஏற்றிய நிலையில் அங்கு திரண்ட உறவினர்கள், சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் கூடலூர் ஆர்டிஓ முகமது குதிரத்துல்லா, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு யானைகளிடமிருந்து தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள், விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டு யானைகளை விரட்ட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்ததை தொடர்ந்து சிவனாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த சிவனாண்டி குடும்பத்தினரிடம் உடனடியாக நிவாரண நிதி, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.