புதுச்சேரியில் 21 வயதுக்குமேல் 55 வயதுக்குள் இருக்கும், அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத, வறுமைகோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்று 2022-23 பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. அந்தத் திட்டத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது. திட்டத்தை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “பெண்கள் கையில் இருக்கும் தொகை குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். பிரதமர் அலுவலக நிதி ஆய்வு அறிக்கையில், நாட்டிலேயே வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வசதி ஆகியவற்றில் புதுச்சேரிதான் முதலிடம். இது ஒன்றரை ஆண்டுக்கால கணக்கெடுப்பு. புதுச்சேரி முன்னேறி வருகிறது. நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடாமல், பட்ஜெட் உரைக்கு பின், மாதம் ரூ.1,000/- திட்டம் தற்போது தொடங்கப்படுகிறது. இந்த அரசு அறிவிக்காத திட்டங்களையும் செய்கிறது.

சில அரசுகள் அறிவித்த திட்டங்களைக்கூட செய்யவில்லை. எந்த மாநிலத்துக்கும் குடியரசுத்தினத்தையொட்டி இதுபோல் பரிசு கிடைத்ததில்லை” என்றார். அவருக்கு முன்னர் பேசிய முதல்வர் ரங்கசாமி, “பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, பெண்கள் பெயரில் சொத்துகளை வாங்கினால் பத்திரப்பதிவு செலவை 50 சதவிகிதமாக குறைப்போம் என்று அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தினோம். அதனால் அரசுக்கு இழப்புதான் என்றாலும், பெண்களுக்கு மிகுந்த பயன் கிடைத்திருக்கிறது. தற்போது அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்ற சூழலில், உதவி ஏதும் கிடைக்காதோருக்கு தற்போது மாதம் ரூ.1,000/- திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதலில் 13,000 பேர் இருப்பார்கள் என்றனர். கணக்கெடுத்து பார்த்தபோது புதுச்சேரியில் 71,000 குடும்பத் தலைவிகள் வந்தனர். சரியாக கணக்கெடுப்பு முடியும் வரை முதற்கட்டமாக 50,000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க இருக்கிறோம். இந்த திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளோம். அதேபோல் முதியோர் உதவித்தொகைக்காக விண்ணப்பித்த 26,000 விண்ணப்பங்கள் கிடப்பில் இருந்தன. நாங்கள் பதவியேற்றவுடன் கிடப்பில் போடப்பட்டிருந்த 10,000 விண்ணப்பதாரர்களுக்கும் உதவித்தொகையை வழங்கினோம். மீதமிருந்த 16,000 விண்ணப்பங்களுக்கும் ஓய்வூதியம் கடந்த வாரம் முதல் தரத்தொடங்கியுள்ளோம். ஓய்வூதியம் கோரி கிடப்பில் இருந்த விண்ணப்பங்கள் அனைத்துக்கும் ஓய்வூதியம் தரத்தொடங்கிவிட்டோம்.
யாருக்கும் உணவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறோம்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், மிதிவண்டி தர நிதி ஒதுக்கிவிட்டோம். வரும் பிப்ரவரி மாதம் கண்டிப்பாக தரப்படும். கடந்த ஆட்சியில் விடுப்பட்ட திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவோம். சில ஆலைகள் திறக்கமுடியாத நிலையில் உள்ளன. அரசு முதலீடு செய்யும்போது லாபத்தை ஈட்டவேண்டும். ஊதியம் தந்தால் மட்டும் சரியாக இருக்காது. லாபத்தில் இயக்கி நிறுவனங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். செயல்படுத்த முடியும் நிறுவனங்களையும், ஆலைகளையும் திறப்போம். சொன்னதை நிறைவேற்றுவோம். சாலைகள் அனைத்தும் விரைவில் போடப்படும்” என்றார்.