இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு ஏராளமானோர் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக, ராமேஸ்வரம் கடற்கரை வழியாக அதிகமானோர் தமிழ்நாட்டுக்குள் வந்தனர். இலங்கை கடற்படை போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு, கள்ளப்படகு மூலம் தப்பிச் செல்லும் மக்களைப் பிடித்து எச்சரித்து திருப்பியனுப்பிவருகின்றனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகள் வராமல் இருந்தனர்.
இந்தச் சூழலில், மீண்டும் இன்று காலை ஐந்து பேர் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் சேரான் கோட்டை கெளுத்திக்குண்டு மணல்திட்டில் வந்து இறங்கியிருப்பதாக மரைன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு சென்ற போலீஸார் சிறுமி உட்பட ஐந்து பேரை மீட்டு மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை, கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன், முனியம்மாள், திசாந்தன், அருள், பிரித்திகா எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்று நள்ளிரவு ஃபைபர் படகு மூலம் வந்திறங்கியதும் தெரியவந்தது.
இந்த நிலையில், போலீஸாருக்கு அவர்கள்மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுத் தப்பித்து வந்திருக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய, அவர்கள் ஐந்து பேரின் புகைப்படங்களையும், அவர்களிடமிருக்கும் ஆவணங்களையும் இலங்கை போலீஸாருக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் போலீஸார், எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள் என்பதை உறுதிசெய்த பின்னர், அவர்கள் முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து இன்றுவரை மொத்தம் 217 பேர் இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு அகதிகளாக வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.