அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப்பேரவைகளுக்கு அடுத்த 16ம் தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இவற்றில் திரிபுராவில் மட்டுமே பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜ.வை வீழ்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனையொட்டி இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு கட்சியினரும் இணைந்து நடத்திய மோட்டார் சைக்கிள் பேரணியில் வன்முறை வெடித்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், வன்முறை தொடர்பாக ஆய்வு நடத்தவும், தேர்தலுக்கான ஏற்பாடுகளை கண்காணிக்கவும், தேர்தல் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள யோகேந்திர திரிபாதி, விவேக் ஜோஹ்ரி மற்றும் பி. முரளி குமார் நேற்று அகர்தலா வந்தனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் 27ம் தேதி அங்கிருந்து மேகாலயா செல்கின்றனர்.
