விருதுநகர்: `ஒரு பக்கம் அரசு, மறுபக்கம் தனி நபர்கள்'- இரட்டைக்கட்டண வசூலிப்பால் கலங்கும் பழங்குடிகள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப்பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயப்பகுதியாகும். இந்த இடம் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்‌ காப்பகமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மலையடிவாரப் பகுதிகளான செண்பகத்தோப்பு, நீரோடை, ராக்காச்சி அம்மன் கோயில், காட்டழகர் கோயில் உள்ளிட்ட இடங்களில் விவசாயப் பணிகளுக்காக வனப்பகுதிக்குள் நுழையும் விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடத்தில் இரட்டை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவது தங்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகக் குமுறுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டுக்குழு சார்பிலும், தனி நபரின் மூலமாகவும் பேச்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள நுழைவு வாயிலிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சோதனைச்சாவடி

இது குறித்து விவசாயிகள், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் வழியே ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் புகார் மனு அளித்திருக்கின்றனர். ஆனாலும், இந்த நிலை தொடர்ந்த வண்ணம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது குறித்து, விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். “விருதுநகர் மாவட்டத்தில் 1,016.57 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் இருக்கின்றன. இதுதான் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள சமூகக் காடுகள்தான் விவசாயிகளும் பொதுமக்களும் சென்றுவர அனுமதியுள்ள பகுதிகளாகும். சதுரகிரி கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், காட்டழகர் கோயில் என புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களும், விவசாயிகளின் ஜீவாதார பகுதிகளும் இதற்குள்ளேயே அமைந்திருக்கின்றன.

சோதனைச்சாவடி

இந்த நிலையில், தங்களுடைய சொந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ள வனப்பகுதிக்குள் செல்லும் விவசாயிகளிடம் இருபது ரூபாய் சேவைக்கட்டணமாக செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவினர் வசூலிக்கின்றனர். இந்தக் கட்டணத்தை செலுத்த மறுத்தால் விவசாயிகளோ, பொதுமக்களோ அது யாராக இருந்தாலும் வனப்பகுதிக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. இதேப்போல, பேச்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் தனி நபர் மூலம் நபருக்கு 20 ரூபாய், காருக்கு 50 ரூபாய், டூவீலருக்கு 25 ரூபாய் எனவும் கட்டணம் வசூலிக்கின்றனர்.

வேலைக்காக வனப்பகுதிக்குள் நுழையும் விவசாயிகளிடம் இப்படி இரட்டைக்கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? அன்றாடக் கூலிக்காகத்தான் விவசாயம் பார்க்க காடு, மலை பாராமல் பணிக்குச் செல்கிறோம். அதிலும், டூவீலரோ, சைக்கிளோ எடுத்துச்சென்றால் அதற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பார்களே என்று பயந்து நடந்தே வேலைக்குச் செல்கிறோம். இது குறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை என அனைத்து இடங்களுக்கும் ஏறிச்சென்று புகார் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் பிரச்னை தீரவேயில்லை. நேரடியாக அரசுதான் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்றனர் ஆதங்கம் தங்கிய குரலோடு.

சுற்றுலாப் பயணிகள்

செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டுக்குழுவின் தலைவர் சின்னத்தாய் இது குறித்து நம்மிடம் பேசுகையில், “வெளி உலகப்பழக்கம் இல்லாத மலைவாழ் மக்களாகிய எங்களிடம், வெளிநபர்கள் வந்து பேசும்போதுக்கூட ‘ஆமா சாமி, இல்ல சாமினு’ இரண்டு வார்த்தைக்கு மேல எங்களுக்குப் பேச வாய் வராது. அவ்ளோ கூச்ச சுபாவம் உண்டு. எங்க மலைவாழ் மக்களுக்கு தேன் எடுத்தல், காட்டு விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டக் கூலி, வாட்ச்மேன், மூட்டை தூக்குவது மற்றும் மலைப்பயிர் அறுவடை செய்ற வேலைமட்டும்தான் தெரியும்.

நாளடைவில் மலைக்குள்ள ஜனங்க நடமாட்டம் அதிகமாகி, என்றைக்கு ஜீப், டிராக்டர், டூவீலர்னு வர ஆரம்பிச்சதோ அன்றைக்கே எங்களோட பிழைப்பு போச்சு. எத்தனையோ சர்கார் மாறிடுச்சு. ஆனாலும், எங்கப் பொழப்பு எப்போதும் போல தினமும் பிரச்னையோடத்தான் கழியுது. செண்பகத்தோப்புல புகழ்பெற்ற கோயில்கள் இருக்குறதால இங்க நிறையபேர் குடும்பமாக சுற்றுலா வருவாங்க. அப்படி வர்றவங்க காட்டழகர் கோயிலுக்கு போயிட்டு, அப்படியே மலையடிவாரத்துல இருக்குற பேச்சியம்மன் கோயில், நீரோடைக்கும் போவாங்க. இப்படியிருக்க, காட்டுக்குள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாச்சு. எங்க பார்த்தாலும், காலி வாட்டர் பாட்டில், மதுபாட்டில், பிளாஸ்டிக் கப், பாலிதீன் கவர், பார்சல் சாப்பாடு கவர், பிஞ்சிப்போன செருப்புனு பாக்குற இடமெல்லாம் அசிங்கமாக கிடந்துச்சு.

சம்பளம்

கொரோனா காலத்துல எல்லாரும் கைவிட்ட சமயத்துல எங்களை அரவணைச்சு தாயாக சோறுக்கு வழிவகுத்தது இந்த மலைதான். அதுல இப்படி அசிங்கமா கொட்டி வச்சிருக்றதை பாக்குறதுக்கு கஷ்டமா இருந்துச்சு‌. இதையெல்லாம், சுத்தம் பண்ணனும்னு தோணுச்சு. ஆனா, எங்களுக்கு உள்ளூற இருந்த பயம் எங்களை தடுத்துச்சு. அப்பத்தான், வன அதிகாரி திலீப்குமார், இங்க பொறுப்புக்கு வந்தார். எங்க கஷ்டங்களை புரிஞ்சிக்கிட்டு உண்மையாகவே எங்க மலைவாழ் மக்களுக்கு உதவ நினைச்சார். அதுக்காக இந்திய அரசியலமைப்பின் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டுக்குழு ஆரம்பிக்க உறுதுணையா இருந்தார்.

குப்பைகள்

இந்தக்குழு முழுக்க, முழுக்க மலைவாழ் மக்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு. மொத்தம் 11 உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த குழுவுல, வன அதிகாரிகள் ஆலோசகராகவும், கண்காணிப்பாளராவும் மட்டுமே செயல்படுறாங்க. எங்கக் குழுவின் பெயரின்படியே, எங்கள் பணியையும் அதிகாரபூர்வமாக ஆரம்பிச்சோம். அதன்படி, செண்பகத்தோப்பை சுற்றி வனப்பகுதிக்குள் தேவையின்றி கிடக்கும் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தோம். காலி பாட்டில்கள், பாலிதீன் கவர்கள் உள்ளிட்டவற்றை தரம்பிரித்து சேகரித்தோம். இவற்றை முறையாக மறுசுழற்சிக்கும், குப்பைக்கொட்டும் இடத்துக்கும் அனுப்பி முதற்கட்டமாக வருமான ஈட்ட ஆரம்பித்தோம்.

சோதனை

அதன்பின், சுற்றுலா வருபவர்களுக்குச் சுத்தமான வனப்பகுதியை அனுபவிக்க தருவதற்காகவும், பராமரிப்பு மற்றும் மது போன்ற சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வன அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி சேவைக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்தோம். அதன்படி, சுற்றுலாவுக்காக நுழைபவர்களிடம் நபர் ஒருவருக்கு 20 ரூபாய் சேவைக்கட்டணம் வசூலிப்பதென நிர்ணயம் செய்தோம். இவ்வாறு வசூலிக்கப்படும் மொத்த பணமும், செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டுக்குழுவின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக்கொண்டு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

சோதனை

ஒரு ஷிப்ட்டுக்கு 4 பேர் வீதம் சுழற்சி அடிப்படையில் தினசரி பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவங்களுக்கு குறைஞ்சபட்சம் கூலியாக ஒருநாளைக்கு 300 ரூபாய் குடுக்குறோம். எல்லாம் சட்டப்பட்டி, முறையாக பதிவுசெய்யப்பட்டுத்தான் நடைபெறுது. எங்களுக்கு பக்கத்துலேயே தனிநபர் மூலமாக செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயிலுக்கு போகிற பாதையில நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இங்க பெரிய பிரச்னையாக இருக்கு. நாங்க, அதிகாரபூர்வ அமைப்பாக இருந்து கட்டணம் வசூலிக்கிறோம். ஆனால் அவங்க சட்டரீதியான அமைப்பு இல்ல. மலையடிவார பகுதியில் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான காடு பலநூறு ஏக்கரில் உள்ளது. இந்த பகுதிக்குள்தான்‌ பேச்சியம்மன் கோயில், காட்டு நீரோடையும் இருக்குது. இங்கப் போகுறதுக்குத்தான் தனி நபர்கள் நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறாங்க. நாங்க அமைச்சிருக்குற செக் போஸ்ட்டை கடந்து சுமார் 300 மீட்டர் தூரத்துலேயே தனி நபர்களும் நுழைவுக்கட்டண வசூல் செய்வதுதான்‌ பெரிய பிரச்னையா இருக்கு.

பலதலைமுறைகளுக்குப் பிறகு எங்க ஜனங்கள் கௌரவமான வேலை செய்றோம். அதுப்பிடிக்காத தனி நபர்கள், விவசாய சங்கங்களை தூண்டிவிட்டு எங்க தட்டுல மண்ணள்ளி போடப் பாக்குறாங்க. உண்மையாக காட்டுக்குள் விவசாயம் பாக்குறவங்களை நாங்க தடுத்து நிறுத்துறது கிடையாது. அவங்கக்கிட்ட கட்டாய கட்டண வசூலிலும் ஈடுபடுவது கிடையாது. விவசாயக்கூலி வேலை பார்க்கப்போறேன்னு சொல்லி சோறு சட்டிக்குள்ள குவாட்டர் பாட்டில் மறைச்சிக் கொண்டு போறாங்க. இந்த மாதிரி ஆட்களை எப்படி விவசாயிங்கிற பேர்ல காட்டுக்குள்ள அனுமதிக்க முடியும். இது போன்றவர்களை தடுத்து நிறுத்தும்போதுதான் தனி நபர்களால் தூண்டிவிடப்பட்டு எங்களுக்கு எதிரா போராட வைக்கிறாங்க. எங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லைதான். அதுக்காக எங்க சமூக மக்கள் எந்தவகையிலும் முன்னேறக்கூடாதுங்குறதுனு நினைக்கிறதை எப்படி அனுமதிக்க முடியும்?” என ஆதங்கப்பட்டார் சின்னதாய்.

இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், “வனம் என்பது, அங்கு பூர்வக்குடிகளாக வாழும் மலைவாழ் மக்களின் அனுபவத்துக்குட்பட்டது. மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக முறைப்படி அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழு. இது புது முயற்சியல்ல. ஏற்கெனவே, தமிழகத்தின் பிற வனப்பகுதிகளிலும், இந்தியா முழுவதும் பல இடங்களில் சூழல் சார்ந்த சமூக பாதுகாப்பு மற்றும் சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்படும் அமைப்பாகத்தான் இதையும் ஏற்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கைக்கு நிலையான வருமானத்துக்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், வனப்பகுதியை சுத்தமாக வைத்திருப்பது, சூழல் மேம்பாடு, பாதுகாப்பான சுற்றுலா அனுபவத்தை தருவது என செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டுக்குழுவுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல், அங்கு கட்டணம் வசூலிக்கும் தனி நபர்களால் எதாவது பொறுப்பு எடுத்துக்கொள்ள முடியுமா? முதலில் வனப்பகுதியின் மூலமாக வரும் வருமானம் அங்கு பூர்வக்குடிகளாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பயன்பட வேண்டும் என்பதே சட்டவிதி. ஆனால் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவுக்கு எதிராக கட்டண வசூலில் ஈடுபடுபவர்கள் மலைவாழ் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்ல. அப்படியெனில், அவர்கள் வசூலிக்கும் பணம் யாருடைய லாபத்துக்காகச் செல்கிறது என்பதை ஆராய வேண்டும்.

சூழல் மேம்பாட்டு குழு

அதேசமயம், சூழல் மேம்பாட்டு குழுவினரால் சேவைக்கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனி நபரால் வசூலிக்கப்படுவது நுழைவுக்கட்டணம். இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தையும் நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். மிகச் சாதாரணமாக சுற்றுலாப் பயணிகளின் போர்வையில் வருபவர்கள் வனப்பகுதிக்குள் சென்று விரும்பத்தகாத சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வனப்பகுதியில் வைத்துக்குடித்துவிட்டு அங்கேயே உடைத்து எறிகின்றனர். இதனால் வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்தாகிறது. மேலும் சிலர், பெண்களுடன் வந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதையெல்லாம் நுழைவு வாயிலிலே தடுக்க முடிவு செய்துதான் சேவைக்கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மனதார ஆன்மிக தலத்துக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்கள், கட்டாயம் இந்த சேவைக்கட்டணத்தை செலுத்திவிட்டு செல்வது இயற்கையாக நடக்கும். மாறாக அரசையும், அங்குள்ள மக்களையும் ஏமாற்றி சட்டவிரோத செயல்புரியும் எண்ணத்தோடு உள்நுழைபவர்களை சேவைக்கட்டண வசூலிப்பாளர்களே அடையாளம் கண்டு தடுத்துவிடுகின்றனர். அதன்படி, நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளி, கல்லூரி பெண்களை அழைத்து வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

இவற்றுக்கெல்லாம் தகுந்த வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் இருக்கின்றன. சேவைக்கட்டண வசூல் முறையை எதிர்த்து தனி நபர்களின் தூண்டுதலின் பேரில் சிலர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். ஆனால் சட்டப்படி அனைத்தும் சரியாக செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாகத்தான் இன்றளவும் நீதிமன்றம் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவின் பணிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.

எனவே சட்டரீதியாக இதை தடுக்க முடியாதவர்கள், தூண்டுதலின் பேரில் போராட்டத்தின் வாயிலாக, சில சமயங்களில் வன்முறையினாலும் ஒடுக்க நினைக்கிறார்கள். இவற்றையெல்லாம் தகுந்த ஆதாரத்தோடு தடுக்க தற்போது கூடுதல் நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வயர்லெஸ் வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டிருக்கின்றன. செண்பகத்தோப்பு பகுதியை பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு வனப்பகுதியாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, மாவட்ட கமிட்டியிடம் முறையாக அனுமதி பெறாமல், ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான வனப்பகுதிக்குள் நுழையத் தனி நபர்கள் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய வலியுறுத்தி ஆண்டாள் கோயில் செயல் அதிகாரிக்கும் விளக்கமான கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது” என்றார்.

இது தொடர்பாக ஆண்டாள் கோயில் செயல் அதிகாரி முத்துராஜிடம் பேசினோம். “செண்பகத்தோப்பில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளவும், நிறுத்தப்பட்ட வாகனங்களை பாதுகாக்கவும்தான் டெண்டர் விடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வனத்துறை சார்பில் புதிதாக கட்டணவசூலில் ஈடுபடுகின்றனர். இது சட்டவிரோதமானது எனக்கூறி பக்தர்கள் சார்பில் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறுகிறதோ, அதன்படி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.