வேலை தேவை! இல்லாவிட்டால் கருணைக்கொலை செய்யவும்: கண்ணீருடன் கலெக்டரிடம் மனு கொடுத்த கைம்பெண்

கும்பகோணம்: கணவனை இழந்து இரண்டு சிறிய குழந்தைகளுடன் உள்ள ஆதரவற்ற விதவை ஆகிய தனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கும்பகோணம் ,  விட்டலூர் கிராமத்தை சேர்ந்த ஜெனிபர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தார். எனது குழந்தைகளை காப்பாற்ற எனக்கு அரசு பணி வழங்குங்கள் , இல்லையேல் எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று ஆதரவற்ற கைம்பெண் கண்ணீருடன் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து அந்த பெண் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ஜெனிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

நான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா விட்டலூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் அன்பு (34). அவர் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற போது அங்கு உயிரிழந்தார். எனது கணவர் இறந்து 4 வருடங்கள் ஆகி உள்ளது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை உள்ளது. மேலும் எனது மகனின் சிகிச்சைக்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். மேலும் நான் எந்த ஒரு வாழ்வாதாரமும் இன்றி வசித்து வருகிறேன்.

தமிழ்நாட்டில் வசித்துவரும் எனக்கு ஆதரவற்ற விதவை என்கிற அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் , இதுவரை எனக்கு எந்தவித பணியும் கிடைக்கவில்லை.

 தற்போது தமிழக அரசு அறிவிக்கப்பட்ட கிராம உதவியாளர் பணி நான் வசிக்கும் கிராமத்தில் ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிக்கு விண்ணப்பித்து நேர்காணல் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று பங்கு பெற்றேன். எனது குழந்தைகளின் அன்றாட தேவைகளை அவர்களுக்கு செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.

ஆகையால் முதலமைச்சர் கருணை உள்ளம் கொண்டு கருணை அடிப்படையில் தனது பகுதியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியை வழங்கி தனக்கும், தனது குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என்றும் , இல்லையேல் தன்னையும் , தனது குழந்தைகளையும் கருணைக்கொலை செய்து விடும்படி கண்ணீருடன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.