“அவங்க ரூ.3000 கொடுப்பாங்களா… நாங்க ரூ.6000 தருவோம்” – பாஜக முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

கர்நாடகா சட்டமன்றத்துக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவிற்கு வந்து மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்துவிட்டு சென்றார். பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சுலேபேவி என்ற கிராமத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். பெலகாவி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.லட்சுமி பற்றி ரமேஷ் விமர்சித்தார். “அவர்(லட்சுமி) தனது தொகுதி வாக்காளர்களுக்கு கிப்ட் சப்ளை செய்வதை பார்க்கிறேன்.

அவர் இது வரை ரூ.1000 மதிப்புள்ள குக்கர், மிக்சர் வகைகளைத்தான் கொடுத்திருப்பார். அவர் மேலும் கிப்ட் கொடுக்கலாம். அவை அனைத்தையும் சேர்த்து ரூ.3,000 இருக்குமா? எனது கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தலா 6,000 கொடுக்காவிட்டால் வாக்களிக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு 6 ஆயிரம் கொடுப்போம் என்று பாஜக முன்னாள் அமைச்சர் தெரிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இது போன்ற செயல்களுக்கு கட்சியில் இடமில்லை. எங்களது கட்சி கொள்கையால் உருவாக்கப்பட்டது ஆகும். அதனால்தான் பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. 2023ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம். பணம் கொடுப்பதாக யாராவது வாக்குறுதியளித்தால் அது கட்சியின் கருத்து கிடையாது. அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்” என்று தெரிவித்தார்.

“பாஜக முன்னாள் அமைச்சரின் அறிக்கையை தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இது பாஜகவின் ஊழல் அளவை காட்டுகிறது. இதை ஏன் தேர்தல் கமிஷனோ அல்லது வருமான வரித்துறையோ கண்டுகொள்ளவில்லை” என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.பிரியங்க் கேள்வி எழுப்பினார். “ரமேஷ் சொன்னது சட்டத்திற்கு எதிரானது. தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் அமலுக்கு வரவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டால் அவர்களை பாஜக தடுத்து நிறுத்தவேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.