மதுரை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு கருத்தரங்கு நடத்த அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்; ஸ்டெர்லைட் தொழிற்சாலை கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்டது. இதன் காரணமாக ஏராளமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது வேலை வாய்ப்பினை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூலம் பயன்களை பெற்று வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மருத்துவ சேவைகள் என அனைத்தும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.
உண்மைக்கு புறம்பான ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீது கூறி பொதுமக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீது தீய எண்ணத்தை ஏற்படுத்தி தொழிற்சாலை மூடப்பட்டது. தற்போது தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீண்டும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை குறித்து அறிவியல் பூர்வமான உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் 50,000 பேர் கலந்து கொள்ளக்கூடிய மாபெரும் விளக்க கருத்தரங்கம் நடத்த அனுமதி வேண்டி தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி தராமல் காவல்துறையினர் மறுத்தனர்.
எனவே காவல் துறையினர் மறுப்பு தெரிவித்தது ரத்து செய்து, இந்த மாபெரும் விளக்கக் கருத்தரங்கை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வழக்கில் ஆஜராக கால அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.