MAM ராமசாமியின் வளர்ப்பு மகனுக்கு எதிரான செட்டிநாடு அறக்கட்டளை மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மறைந்த தொழிலதிபர் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் தத்தெடுத்த ஐயப்பன் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர்.ஏ.சி முத்தையா கடந்த 2006ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ஐயப்பனை தத்தெடுத்ததை ரத்து செய்த எம்.ஏ.எம்.ராமசாமி, தனது சொத்துக்களை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், வளர்ப்பு மகனான ஐயப்பன் சார்பில் வாரிசு சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமாமி ரத்து செய்து விட்டதாக தெரிவித்தாலும் அதற்கான எழுத்துப்பூர்வர்மான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரீசிலித்தே வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்ற தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளையின் சார்பில், ஏ.சி.முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.. 

இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அறக்கட்டளை சார்பில் இந்த வழக்கை தொடர முடியாது என்றும் தத்தெடுப்பது தனிப்பட்ட உரிமை என்றும் அதை மூன்றாவது நபர்கள் எதிர்த்து வழக்கு தொடர உரிமை இல்லை என்றும் ஐயப்பன் தரப்பில் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.