Superstar: தமிழ் சினிமாவின் மாஸ் முகவரி; ரஜினிக்கு `சூப்பர்ஸ்டார்' பட்டம் வந்த கதை தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பின் அம்சங்களில் அக்கறை காட்ட, ரஜினிகாந்த தன் ஸ்டைலால் மக்களின் கவனத்தை ஈர்த்தார். ரஜினி, எம்.ஜி.ஆரின் பாணியைப் பின்பற்றிப் போக, கமல் நடிப்பு ராட்சசன் என்ற அவதாரம் எடுத்தார். விஜய், அஜித்துக்கு இப்படிப்பட்ட அவதாரங்களைக் காட்ட முடியாதது, ஒருவகையில் அவர்கள் இரண்டு பேருக்குமே வசதியாக இருந்தது எனலாம்.

ஆரம்பத்திலிருந்தே ஸ்டைலில் கவனம் செலுத்தி வந்த ரஜினியை கலைஞானம்தான் கவனித்து வந்தார். அவரை ஒப்பந்தம் செய்து ‘பைரவி’ படத்தை ஆரம்பிக்க எண்ணியபோது ரஜினியே அதை நம்பவில்லை. ”ஏதாவது வில்லன் வேடம் கொடுங்கள். என்னை ஹீரோவாக்க வேண்டாம்!” என அவரே கேட்டுக் கொண்டார். அந்த வகையில் அவரை ஹீரோ மெட்டீரியலாக முதலில் உணர்ந்தது கலைஞானம்தான். அதை இன்றளவும் மறந்துவிடாமல் அவருக்காக நகரின் பிரதான இடத்தில் ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்தார் ரஜினி.

விஜய், ரஜினி

இப்போது தமிழ்த் தரணியெங்கும் `சூப்பர்ஸ்டார்’ சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்தான் `சூப்பர்ஸ்டார்’ என `வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜூ சொல்லி வைக்க, சமூக வலைதளங்களில் அனல் பறந்திருக்கிறது. இந்த விவாதங்கள் அனைத்தும் ரஜினியின் ரசிகர்களுக்குப் போய்ச் சேர, அவர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். அந்த அரசியலை ஒரு பக்கம் வைத்துவிடுவோம். உண்மையில் ரஜினிக்கு `சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டம் எப்படிக் கிடைத்தது என்பதே சுவையான வரலாறு…

கலைஞானத்தின் பார்வையில் ரஜினி விழ, அவரை ஹீரோவாக்கினார். இதைக் கேள்விப்பட்ட தேவர், கலைஞானத்தை அழைத்து, “இந்த முட்டாள்தனமான முயற்சிகளை எடுத்து மூட்டை கட்டு. உனக்கு நானே ஹீரோவை ஏற்பாடு செய்து தருகிறேன். எனக்காக எவ்வளவோ உழைத்திருக்கிறாய். உன் நல்லதுக்குத்தான் சொல்வேன். ரிஸ்க் எடுக்காதே!” எனக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். மீறியும் கலைஞானம் ‘பைரவி’ படத்தை எடுத்து முடித்தார். அதைப் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு படத்தின் சென்னை நகர உரிமையை வாங்கினார்.

‘பைரவி’ படத்தின் போஸ்டர்

சென்னையில் பிரதான சாலையான அண்ணா சாலையில் அப்போது பிளாசா தியேட்டர் இருந்தது. அதில் 35 அடி உயர பிரமாண்ட கட்டவுட்டை ரஜினிக்காக வைத்தார் தாணு. அதில்தான் முதன் முதலாக ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

அங்கே கட்டவுட் வைத்ததோடு நின்றுவிடாமல் தமிழ்நாடு முழுக்கவும் அந்த போஸ்டர்களை ஒட்ட ஏற்பாடு செய்தார். அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற பெயர்களே முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அதோடு தன் பெயரும் சேர்ந்து இப்படி இடம்பெற்றிருந்ததைக் கண்டு ரஜினி முதலில் பதறிப் போனார். தாணுவை அழைத்து, “என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்?” எனக் கேட்டிருக்கிறார். அவர், “அதற்கான முழு தகுதியும் உங்களுக்கு இருக்கிறது” எனச் சொல்லியிருக்கிறார். கொஞ்ச காலம் இதே பேச்சுதான் தமிழ்த் திரையுலகம் முழுக்கவே இருந்தது.

அவர் பேசுகிற மேடையெங்கும் அவரை ‘சூப்பர்ஸ்டார்’ என்றே அழைத்தார்கள். திரையுலகில் அவரது நேர் எதிரான போட்டியாக இருந்த கமல்ஹாசனே அந்தப் பெயரை குறிப்பிட்டு பேசியதும் நடந்தது. அடுத்தடுத்து இளைஞர்களின் மொத்தப் பார்வையும் விழ, அவர் பெயரே ரஜினி என்பது மறந்துப் போய் ‘சூப்பர்ஸ்டார்’ என்றே ஆனது. அடுத்தடுத்த வெற்றிகள், அதைத் தொடர்ந்து அரசியலிலும் அவ்வப்போது தலையிட்டு மீடியாவுக்கும் பழக்கப்பட்ட முகமானார். ‘வசூல் சக்ரவர்த்தி’ என மதிப்பிற்குரியவராக தமிழ் சினிமாவில் வளர்ந்து நின்றார். அடுத்தடுத்த வெற்றிகள், ‘பாட்ஷா’ போன்ற மைல்கல் மாஸ் படங்கள் என்றே அவரின் கரியர் நகர், அந்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு இதுவரை எந்தத் திசையிலிருந்தும் எதிர்ப்பில்லை.

பாட்ஷா

அதிரடிக்கும் சண்டைக் காட்சிகளுடன் ரகளையான காமெடியும் அவருக்குச் சரளமாக வந்தது. அதேபோல குடும்பங்களை இணைக்கும் `ஃபேமிலி என்டர்டெயினர்’ படங்களையும் விட்டுவிடாமல் செய்தார். ஒரு குடும்பத்திலுள்ள அனைவருமே அவரின் ரசிகர்களாக மாற இதுவே காரணமாக அமைந்தது.

இப்போது ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு வயது 72. இன்னமும் ட்ரெண்டில் இருக்கும் நடிகராகவே இருக்கிறார். இளம் இயக்குநர்கள் பலரை அழைத்து கதை கேட்கிறார், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இவ்வளவு ஏன், கோடம்பாக்கத்தில் புதிதாக நுழையும் எவரும், “இந்த சீன்ல எதிரிகள் மார்க்கெட்ல வந்து நிக்கறாங்க… சரசரன்னு கதவைத் திறந்துட்டு தெறிக்கிற கோபத்தில் ரஜினி என்ட்ரி” என இன்னமும் இவரை மனதில் வைத்துதான் கதை சொல்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவின் மாஸ் முகவரியாகிப் போனவர் ரஜினி.

ரஜினி

தனக்கே உரிய பிரத்யேக உடல்மொழியுடனும், தடதடக்கும் குரலுடனும் அவர் திரையில் நுழையும்போதே தியேட்டரே அதிர்ந்து சொல்கிறது, அவர் ஏன் இன்றளவும் `சூப்பர்ஸ்டார்’ என்பதை!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.