அதிமுக-விலோ குழப்பம்… குஜராத்தில் பொங்கல் கொண்டாட்டம் – ஓ.பி.எஸ் பிளான் தான் என்ன?!

பன்னீர், எடப்பாடி இடையேயான மோதலால் அ.தி.மு.க  இரண்டாகத் துண்டாகி கிடக்கிறது. பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதன் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கி இரு தரப்பும் தவம் கிடக்கிறது. இந்தச் சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், அத்தொகுதிக்கு  பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

ஜி.கே.வாசன் – ஓ.பி.எஸ்

இதேபோல, இத்தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் கடந்த முறை த.மா.கா போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் த.மா.கா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக கேட்கவே, இடைத்தேர்தலில் போட்டியிட விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் – அ.தி.மு.க இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. ஆனால், பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அ.தி.மு.க சார்பில் யாரை வேட்பாளராகக் களம் இறக்குவது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஒருங்கிணைப்பாளருக்குத்  தான் அதிகாரமிருக்கிறது என்று பன்னீர் தரப்பு கூறி வரும் நிலையில், இடைக்கால  பொதுச்செயலாளருக்குத் தான் அதிகாரமிருக்கிறது என்று எடப்பாடி கூறிவருகிறார்.

குஜராத் நிகழ்ச்சியில்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குத் தாமதமாகும் பட்சத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தால், சின்னம் முடக்கி வைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இரண்டு அணிகளும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதால், இந்தக் குழப்பம் அதிமுக தொண்டர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. இதேபோல, இருதரப்பினரும் தங்களுக்கு  ஆதரவுகோரி  ஜி.கே வாசன்,  ஜான் பாண்டியன்,  அண்ணாமலை  உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துள்ளனர். இதனால், கூட்டணிக் கட்சி தலைவர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இந்தச்சூழலில், அதிமுக-வில் நடக்கும் குழப்பமான சூழலை  தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.கவினர் இடைத்தேர்தலில் களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அ.தி.மு.கவில் இடைத்தேர்தல் களேபரங்கள்  கொடிகட்டிப் பறக்கும் நிலையில் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 22-ம் தேதி குஜராத் புறப்பட்டுச்  சென்றுள்ளார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில், கர்ணாவதி தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் சிறப்பு  விருந்தினராகக் கலந்துகொண்டார். ஈரோடு இடைத்தேர்தலுக்குத் தயார் ஆகும் வகையில் எடப்பாடி அணி விருப்ப மனு விநியோகம் செய்யும் பணியைத் தொடங்கிவிட்டது. ஆனால், பன்னீரோ தேர்தலைச் சந்திக்க எந்த ஏற்பாடும் செய்யாமல் இருப்பது தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், பன்னீரின் நெக்ஸ்ட் பிளான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி – பன்னீர்

குறித்து ஓ.பி.எஸ்-க்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரிக்கையில், “இடைத்தேர்தலில் அ.தி.மு.க சின்னத்தை இருவர் கோரும்பட்சத்தில் அது கண்டிப்பாக முடங்கும். ஆகையால், சுயேட்சையாக தான் போட்டியிட வேண்டுமென்பது பன்னீர் செல்வத்துக்கு நன்றாக தெரியும். குஜராத் செல்லும் முன்பாக பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசிவிட்டுத் தான் சென்றுள்ளார். இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவு அளிக்கும் மனநிலையில் தான் இருக்கிறார். கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இருப்பதால் இடைத்தேர்தலில் அவர் முழு கவனம் செலுத்தவில்லை. நீதிமன்ற வழக்கு தான் அவரின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. ஒருவேளை பா.ஜ.க இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்றால் கண்டிப்பாக ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து வேட்பாளர்கள் களம் காண்பார்கள். இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத்  தெரிவிப்போம்” என்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.