ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய டாக்டர் ஷர்மிகாவை விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டதால், ஜனவரி-24-ம் தேதி (இன்று) நேரில் விளக்கமளிக்கவுள்ளார் ஷர்மிகா.
சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளர் அனுப்பிய 2023 ஜனவரி-6 ம் தேதியிட்ட நோட்டீஸில் உள்ள தகவல்கள் இதுதான், ‘பதிவுபெற்ற சித்த மருத்துவர் என். ஷர்மிகா, சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரண்பாடான கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்ததாக 31.12.2022 அன்றைய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடப்பட்ட கட்டுரை/ பல்வேறு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக பதிவாளர் முன்பு 24-01-2023 அன்று முற்பகல் 11 மணிக்கு நேரில் வருகை தந்து விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்.”
“தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும்.”
“ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும்.”
“நம்மவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் (செரிமானம்) பண்ணமுடியாது. பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது.” -இப்படி சித்த மருத்துவர் என்கிற பெயரில் டெய்சி சரணின் மகள் ஷர்மிகா மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான தவறான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது சித்த மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் மூலம் டாக்டர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் வந்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஷர்மிகா விதிகளை மீறியிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் நம்மிடம் கூறும்போது, “மருத்துவ வல்லுநர் குழுவின் ரிப்போர்ட் வந்தபிறகு, ஷர்மிகா கவுன்சிலின் விதிகளை மீறியுள்ளாரா? என்பதை ஆராய்ந்து தற்காலிகமாக அவரது பதிவு எண்ணைக் கேன்சல் செய்வோம். அது ஆறு மாதமா, ஒரு வருடமா என்பதெல்லாம் வல்லுநர் குழு முடிவு செய்யும்” என்றார். அதாவது, டாக்டர் ஷர்மிகாவின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டால், அந்த காலக்கட்டத்தில் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு சிகிச்சையோ ஆலோசனையோ வழங்கமுடியாது.