புதுச்சேரியில் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தில் குளறுபடி: மாதர் சங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அவசரகதியில் தொடங்கியுள்ளனர் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து அச்சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் இளவரசி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் 2020-ல் பொதுமக்கள் மத்தியில் கள ஆய்வு செய்து அரிசி தான் வேண்டும், பணம் வேண்டாம் என்று அப்போதைய ஆளுநர் கிரண்பேடி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அதனடிப்படையில் மூன்று மாதம் அரிசி வழங்கப்பட்டது. படிப்படியாக குறைந்து புதுச்சேரி முழுவதும் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பலகட்ட போராட்டங்களை அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு நடத்தியது.

இதையடுத்து கடந்த 2022 அக்டோபரில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். உடனடியாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைச்சர் கூறியது வெறும் வாய் ஜாலம்போல் இல்லாமல், உடனே ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்றோம். அதன் அடிப்படையில் தீபாவளி பஜார் அமைக்கப்பட்டது.

அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகையிட்டு கேட்டபோது, ரேஷன் கடைகளை திறந்துவிடுவோம் என்று கூறினார். ஆனால் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பொங்கலுக்கு வழங்க வேண்டிய பொங்கல் இலவசங்கள் ரேஷனில் வழங்கப்படும் என்றனர். பின்னர் அங்கன்வாடி என்றனர். ஆனால் இறுதியாக இலவச பொருட்கள் போடும் முடிவு ரத்து செய்யப்பட்டது. மாறாக ரூ.500 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் தற்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரேஷன் கடைகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

மதுபானக் கடைகளை திறப்பதற்கு ஆளுநரால் அனுமதி அளிக்க முடிகிறது. ஆனால் ரேஷன் கடைகளை திறப்பதற்கு கை வலிக்கிறது. அவர்களின் இந்த கொள்கைப் போக்கை கண்டித்து வரும் 2-ம் தேதி அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் குடிமைப்பொரும் வழங்கல் துறை முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அவசரகதியில் தொடங்கியுள்ளனர். முறையான ஆய்வு எதுவும் செய்யவில்லை. அரசின் எந்த உதவியும் பெறாதவர்களுக்கு இத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இது குடும்பத்தில் பிரச்சினையை உண்டாக்கும். எனவே முறையாக ஆய்வு செய்து, உரிய பயனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும்” என்றார். பேட்டியின்போது முனியம்மாள், சத்யா, உமா, சரளா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.