ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய டாக்டர் ஷர்மிகாவை, விளக்கமளிக்க தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டதால், இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகினார் டாக்டர் ஷர்மிகா.
“நம்மைவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால செரிமாணம் பண்ணமுடியாது. பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது” என்பன போன்ற பல கருத்துகளை மருத்துவர் ஷர்மிகா சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில், ‘பதிவுபெற்ற சித்த மருத்துவர் ஷர்மிகா, சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரண்பாடான கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்ததாக 31.12.2022 அன்றைய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடப்பட்ட கட்டுரை/ பல்வேறு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக பதிவாளர் முன்பு 24-01-2023 அன்று முற்பகல் 11 மணிக்கு நேரில் வருகை தந்து விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் இணை இயக்குநர் பார்த்திபன், வல்லுநர் குழுவின் முன்பு விசாரணைக்காக, இன்று தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார் டாக்டர் ஷர்மிகா. உடன் அவரின் கணவரும் வந்திருந்தார்.

சுமார் 1 மணிநேரம் நடந்த விசாரணையில் தன் தரப்பு விளக்கத்தைப் பேசினார். விசாரணை முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொள்ள, எந்த விளக்கமும் அளிக்காமல் பட படப்போடு பைக்கில் ஏறி புறப்பட்டார்.

ஷர்மிகாவிடம் விசாரணை செய்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் கூறும்போது, “ஷர்மிகாவிடம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி எழுத்துப்பூர்வமான விளக்கத்தை கேட்டிருக்கிறோம். அதற்குப்பிறகு, வல்லுநர் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
விசாரணை மேற்கொண்ட வல்லுநர் குழுவிடம் நாம் பேசியபோது, “மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக பேசியது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, `மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது…’ `ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும்…’ `நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும்’ இந்த முக்கியமான மூன்று கேள்விகளை மையப்படுத்திதான் அனைவரும் கேட்டோம். அதற்கு, ஷர்மிகா விளக்கமளித்தார். அது, திருப்தியளிக்காததால் எழுத்து வழியாக விளக்கம் கேட்டிருக்கிறோம்” என்கிறார்கள்.