கம்பம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக, கம்பம் அருகே, சுருளி அருவியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது சுருளி அருவி. சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் இந்த அருவி விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் குளிக்க வருகின்றனர்.
இந்நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று அதிகாலை முதல் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு, கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலர்கள் தடை விதித்துள்ளனர்.