
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன்குட்டை தெருவைச் சேர்ந்தவர் முருகன். காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ராணிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மனைவி மேகலாவுக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் உதவி ஆய்வாளர் முருகன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு இவரது தாயார் உயிரிழந்தார். இதனிடையே, முருகனுடன் பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது.

ஆனால் முருகனுக்கு சம்பள உயர்வு கூட கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மாடியில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காவல் ஆய்வாளர் முருகன் பணிச் சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பம் பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.