பாலகிருஷ்ணாவுக்கு எதிராக களமிறங்கிய `அக்கினேனி' குடும்பம்! ஒற்றை பேச்சால் கிளம்பிய புயல்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வீர சிம்ம ரெட்டி படம் வெளியாகியிருந்தது. சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்திருந்தது. அதில் பேசிய நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரை குறிப்பிட்டு, மரியாதை குறைவான விதத்தில் பேசி சிரித்திருந்தார். இதற்கு, பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் பேரனும் நடிகருமான நாக சைதன்யா, கண்டனம் தெரிவித்துள்ளார்.

image

அந்த விழா மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா “என் அப்பா சீனியர் என்.டி.ஆர் (என்.டி.ராமராவ்) பற்றியும், அவருடன் சமகாலத்தில் இருந்த `ஆ ரங்காராவ் – ஈ ரங்காராவ், அக்கினேனி – தொக்கினேனி’ என பலரை பற்றியும் நாங்கள் படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்போம்” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள், சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் ரங்காராவ் ஆகிய இருவருமே தெலுங்கு சினிமாவின் ஆளுமைகளில் மிகமுக்கியமான நபர்களாவர். இதனால் நடிகர் பாலகிருஷ்ணாவின் பேச்சுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வந்தன. இவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளும் இன்றைய தேதிக்கு தெலுங்கு சினிமாவின் முக்கிய ஆளுமைகள் ஆவர்.

அதேபோல, பாலகிருஷ்ணாவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான என்.டி.ஆர்-ம், அக்கினேனி நாகேஷ்வர் ராவ்-ம் கூட சிறந்த நண்பர்களாவர். இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். என்.டி.ஆர்.-ன் வாழ்க்கை வரலாற்றில்கூட, இவர்களின் நட்பு குறித்த காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க, குடும்ப நண்பரும், பழம்பெரும் நடிகருமான அக்கினேனி நாகேஷ்வர் ராவ்வை பற்றி நடிகர் பாலகிருஷ்ணா தற்போது மரியாதை குறைவாக பேசியிருந்தது அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

image

அந்தவகையில் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் பேரனும், நடிகர் நாகர்ஜூனாவும் மகனுமான நடிகர் நாக சைதன்யா சமூகவலைதளங்களில் தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “நந்தமுரி தாரக ராமராவ் (என்.டி.ஆர்), அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கா ராவ் ஆகியோரின் கலைத்திறன், தெலுங்கு சினிமாவின் தூணாகவும் பெருமைக்குறிய விஷயமாகும் இருந்து வருகிறது. அப்படியானவர்களை அவமரியாதைக்குள்ளாக்குவது, நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு சமமானது” என்றுள்ளார். இந்த பதிவில், #ANRLivesOn (அக்கினேனி நாகேஸ்வர ராவ், எப்போதும் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்) என்று குறிப்பிட்டுள்ளார் நாக சைதன்யா.

இதே ட்வீட்டை, அக்கினேனி நாகேஷ்வர் ராவ்வின் மற்றொரு பேரனான அகில் அக்கினேனியும் பகிர்ந்து தன் கண்டனத்தையும் பகிர்ந்துள்ளார். 

இச்சம்பவத்தில் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகனான நடிகர் நாகர்ஜூனா எந்த கருத்தும் தற்போது வரை தெரிவிக்கவில்லை. ரசிகர்கள் பலரும், #ANRLivesOn என்ற ஹேஷ்டேக்கின் கீழ் அக்கினேனி நாகேஷ்வர ராவ்வின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

பாலகிருஷ்ணா இதுபோல மேடைகளில் கலைஞர்களை குறைத்து பேசுவது முதன்முறையல்ல என்றுகூறி, அவரது பழைய வீடியோக்கள் சிலவற்றை ட்ரெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள். அதில் ஒரு வீடியோவில் அவர், “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை. எப்போதாவது ஒருமுறை ஒரு ஹிட் கொடுத்துவிட்டு, அவர் ஆஸ்கர் வாங்கியிருப்பார்” என்று பேசியிருந்தார். இந்த வீடியோவும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.