குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரம், நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. `இந்தச் சம்பவங்களின்போது கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதற்கிடையே, இது தொடர்பாக மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், பிபிசி ஊடகம் குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து, “India: The Modi Question” என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில், யூடியூப், ட்விட்டர் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2021-ன் கீழ் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அந்த வீடியோவை இணைத்து வெளியிடப்பட்டிருக்கும் 50-க்கும் மேற்பட்ட ட்விட்டர் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. யூடியூப் மற்றும் டிவிட்டர் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் இந்த உத்தரவைப் பின்பற்ற ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய அரசால் முடக்கப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) நேற்று அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறது. இது தொடர்பாக பேசிய பல்கலைக்கழக நிர்வாகம், “மத்திய அரசு தடை விதிப்பதற்கு 2 நாள்களுக்கு முன்னாள் இந்த ஆவணப்படம் திரையிட திட்டமிட்டப்படிருந்தது. அதன் தொடர்ச்சியாக தான் மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தைப் பார்த்திருக்கிறார்கள். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்படும்” எனத் தெரிவித்திருக்கிறது.