Budget 2023: தள்ளிப்போடப்பட்டதா வங்கி தனியார்மயமாக்கல்? காரணம் என்ன?

பட்ஜெட் 2023: 2023 பட்ஜெட் குறித்து அரசுக்கு உள்ள முக்கிய செயல்திட்டங்களில் வங்கி தனியார்மயமாக்கல் முன்னணியில் இல்லை என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. இருப்பினும், கடந்த ஆண்டில், தனியார்மயமாக்கல் பற்றி அதிகம் பேசப்பட்டது, வங்கி தொழிற்சங்கங்களும் இந்த யோசனையை கடுமையாக எதிர்த்தன. நிதி அமைச்சகம் ஜனவரி 19 அன்று பொது வங்கிகளின் தலைவர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்களில் வங்கி தனியார்மயமாக்கல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எங்கள் இணை இணையதளமான ஜீ பிசினஸ் குழு வங்கித் துறையைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் வங்கி தொழிற்சங்கத் தலைவர்களுடன் இது குறித்து பேசியது. வங்கி தனியார்மயமாக்கலை அரசாங்கம் ஏன் பின்னுக்கு தள்ளியிருக்கக்கூடும் என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
இந்த நிதியாண்டில் புதிய வங்கிகள் தனியார்மயமாக்கல் திட்டம் மற்றும் முதலீட்டு இலக்கை வைக்காததற்கு அரசாங்கத்தை பாதித்த ஐந்து முக்கிய காரணங்கள் இங்கே:

1. 2024 இல் மக்களவைத்தேர்தல்

இந்த பட்ஜெட் 2024 தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஏற்கனவே வங்கி தனியார்மயமாக்கல் திட்டம் தொடர்பான பல எதிர்மறை உணர்வுகள் உள்ளன. “ஒரு வருடத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய அமைப்புகளான வங்கிகளை தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைப்பது அரசியல் ரீதியாக சரியாக இருக்காது” என்று தற்போது வங்கித் துறையில் ஆலோசகராக இருக்கும், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) முன்னாள் அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா கூறினார். 

2. முதலீட்டு இலக்கு எட்டப்படவில்லை
 
முந்தைய பட்ஜெட்டின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐடிபிஐ பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான பங்கு விலக்கு (டிஸ்இன்வெஸ்ட்மெண்ட்) இலக்கை வெளிப்படுத்தினார். 23ஆம் நிதியாண்டில் ரூ.65,000 கோடி பங்கு விலக்கல் இலக்கை அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால் இதுவரை ரூ.32,000 கோடி மட்டுமே பங்கு விலக்கல் மூலம் அரசுக்கு கிடைத்துள்ளது. இதேபோல், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஆகியவற்றின் பங்கு விலக்கல் இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை.

“2023 நிதியாண்டிற்கு எல்ஐசி முதலீட்டிலிருந்து 1 டிரில்லியன் தொகையை பெறும் எதிர்பார்ப்பு முதலில் சந்தையில் இருந்தது. இருப்பினும், உலக சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக, எல்ஐசி மூலம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டது. இந்த நிதியாண்டிலும் பிபிசிஎல் பங்கு விற்பனை நடைபெறவில்லை. எனவே, 23ஆம் நிதியாண்டில் உண்மையான முதலீட்டுத் தொகையானது இலக்கை விட சுமார் 20 ஆயிரம் கோடிகள் குறைவாக இருக்கலாம்,” என்று யுபியின் (முன்னர் கிரெடவென்யூ என அழைக்கப்பட்டது) முதன்மை பொருளாதார நிபுணர் டாக்டர் சுதர்சன் பட்டாச்சார்ஜி மேலும் கூறினார்.

3. PSB களின் செயல்திறனில் அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகளின் மோசமான செயல்பாடே அரசு தனியார்மயமாக்கலை முதன்முதலில் முன்வைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். வங்கிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டியிருந்தது. இருப்பினும், கடந்த இரண்டு காலாண்டுகளில் PSBகள் கணிசமான அளவில் சிறப்பாகச் செயல்பட்டன. “பொது வங்கிகள் லாபத்தில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. கடந்த இரண்டு காலாண்டுகளின் முடிவுகளுக்குப் பிறகு PSB-களின் பங்கு விலையும் உயர்ந்துள்ளது. இதனால், அரசு பொது வங்கிகளில் இருந்தும் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது,” என பேங்க் ஆஃப் பரோடாவின் மூத்த வங்கியாளர் ஒருவர் கூறினார்.

4. இந்த நிதியாண்டில் சிறந்த வரி வசூல்

நஷ்டத்தைச் சமாளித்து நல்ல வருமானம் ஈட்ட அரசாங்கத்தின் வழிகளில் தனியார்மயமும் ஒன்றாகும். “முன்னதாக, திட்டச் செலவினங்களை உயர்த்துவதற்கான ஒரு ஆதாரமாக பங்கு விலக்கல் கருதப்பட்டது. ஆனால் நேரடி மற்றும் மறைமுக வரி வசூலில் ஏற்பட்ட ஏற்றத்துக்கு பிறகு, அந்த யோசனை இரண்டாம் நிலை முக்கியத்துவத்தை பெற்றுள்ளது,” என்று மல்ஹோத்ரா கருத்து தெரிவித்தார்.

5. சரியான நேரம் இல்லை

தனியார்மயமாக்கலின் அதிகபட்ச பலனைப் பெற, சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பதை அரசு உணர்ந்திருப்பதாக வங்கியாளர்கள் மற்றும் வங்கித் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “கடந்த பட்ஜெட்டில் வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக அரசு ஏற்கனவே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இப்போது, சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால், அரசு அதற்கான சரியான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறது” என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் சிஎச் வெங்கடாசலம் கூறினார்.

வங்கி தனியார்மயமாக்கலுக்கு சந்தையில் இருந்து இதுவரை கிடைத்த பதில்கள் மந்தமாகவே இருந்ததாகவும் மூத்த வங்கியாளர்கள் சுட்டிக்காட்டினர். இரண்டு வங்கிகளுக்கான விற்பனை திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த விலை இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.